‘ஜன நாயகன்’ படக்குழு எடுத்த முக்கிய முடிவு!
29 தை 2026 வியாழன் 12:55 | பார்வைகள் : 478
பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருந்த ‘ஜனநாயகன்’ படத்தை பார்த்த தணிக்கை வாரியம், சென்சார் வழங்க மறுத்து மறு ஆய்வு செய்ய பரிந்துரை அளித்தது. இதை எதிர்த்து, அப்படத்தை தயாரித்துள்ள கே.வி.என். நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி பி.டி.ஆஷா, உடனடியாக சென்சார் வழங்க உத்தரவிட்டு, மறுஆய்வு பரிந்துரையை ரத்து செய்தார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்த தணிக்கை வாரியம், தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடையை பெற்றது.
இந்த நிலையில், கடந்த 20ஆம் தேதி தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் காரசார விவாதம் நடைபெற்றது. திரைப்படத்திற்கு, தயாரிப்பாளர்கள் சான்று பெறும் முன் வெளியீட்டு தேதியை எப்படி அறிவிக்க முடியும் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், ஒரே நாளில் அனைத்து நீதிமன்ற நடைமுறைகளையும் முடித்து, உத்தரவு பெற வேண்டும் என்பதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்திருந்தது.
இந்த வழக்கில் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தா, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு தீர்ப்பை வாசித்தது. அதன்படி, "மீண்டும் வழக்கை தனி நீதிபதி பி.டி.ஆஷாவே விசாரிக்க வேண்டும். விசாரணையில், தயாரிப்பு நிறுவனம் மற்றும் சென்சார் போர்டுக்கு உரிய அவகாசம் வழங்கி, புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என நீதிபதிகள் தெரிவித்தனர்.
தீர்ப்பை பொறுத்தவரை, தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்பட்டு, மறு ஆய்வு குழுவுக்கு படத்தை அனுப்பி, அதை குறிப்பிட்ட காலக்கட்டத்துக்குள் முடித்து வைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தீர்ப்பு மீண்டும் தனி நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளதால் படம் வெளியாவதில் காலதாமதம் ஆகலாம்.
இதற்கிடையே, ஜன நாயகன் படக்குழு இந்த விவகாரத்தில் புதிய நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளது. தனி நீதிபதி விசாரிக்க உள்ள நிலையில் வழக்கை வாபஸ் பெற படத் தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டியலிட்டு விசாரணைக்கு வரும்போது வழக்கை வாபஸ் பெற தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தணிக்கைச் சான்றிதழ் தொடர்பாக மறு ஆய்வு குழுவை அணுகவும் தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளது. தலைமை நீதிபதி உத்தரவு தொடர்பாக இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்திய தயாரிப்பு நிறுவனம் அதன்படி தற்போது வழக்கை வாபஸ் பெற்று ரிவைசிங் கமிட்டிக்கு செல்ல திட்டமிட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan