இந்திய விமான போக்குவரத்துறையில் முதலீடு செய்யுங்கள்: பிரதமர்
29 தை 2026 வியாழன் 08:43 | பார்வைகள் : 683
தெலுங்கானாவின் ஹைதராபாதில் துவங்கி உள்ள, 'விங்ஸ் இந்தியா 2026' என்ற சிவில் விமான போக்குவரத்து துறை மாநாட்டில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பேசிய பிரதமர் மோடி, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் இந்திய விமான போக்குவரத்துறையில் முதலீடு செய்யுங்கள், என முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
ஆசியாவின் மிகப்பெரிய சிவில் விமான போக்குவரத்து துறை மாநாடு, 'விங்ஸ் இந்தியா 2026' என்ற பெயரில் நேற்று ஹைதராபாத்தில் உள்ள பெகும்பேட் விமான நிலைய வளாகத்தில் துவங்கியது. இந்த மாநாடு நான்கு நாட்கள் நடைபெற உள்ளது.
சாகச நிகழ்ச்சி
மாநாட்டை மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த விமான நிறுவன தலைவர்கள் அதிகாரிகள் பங்கேற்றனர். மாநாட்டில் சர்வதேச கண்காட்சி, விமான சாகச நிகழ்ச்சி, விமானத் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆகியவை நடைபெற உள்ளன.
இந்த மாநாட்டை வாழ்த்தி பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ வடிவிலான உரையில் கூறியிருப்பதாவது:
உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் சிவில் விமான சந்தைகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. விமான உற்பத்தி, விமானி பயிற்சி, விமான போக்குவரத்து, விமான குத்தகை போன்ற துறைகளில் முதலீட்டாளர்களுக்கு பெரும் வாய்ப்புகள் உள்ளன.
உடான் திட்டம்
சரக்கு போக்குவரத்தை வேகமானதாக மாற்ற அரசு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. இது இந்தியாவை சர்வதேச அளவில் முக்கிய விமான சரக்கு மையமாக உருவெடுக்க செய்யும்.
கடந்த 2014ல் 70 விமான நிலையங்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 160ஐ கடந்துள்ளது. 2047க்குள் 400க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் உருவாகும்.
'உடான்' திட்டத்தின் மூலம், முன்பு விமான சேவையே இல்லாத வழித்தடங்களில், 1.50 கோடிக்கும் மேற்பட்ட பயணியர் பயணித்துள்ளனர். இந்திய விமான போக்குவரத்து துறையின் வளர்ச்சி பயணத்தில் முதலீட்டாளர்கள் நீண்டகால பங்குதாரராகவும், 'இணை பைலட்' போலவும் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா - தெற்கு ஆசியா சந்தைக்கு 3,300 புதிய விமானங்கள் தேவை
'விங்ஸ் இந்தியா 2026' மாநாட்டில், 'தெற்கு ஆசிய சந்தைக்கான வணிக கண்ணோட்டம்' என்ற தலைப்பில், 'போயிங்' நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. அதன் விபரம்: இந்தியா மற்றும் தெற்கு ஆசிய நாடுகளில் விமான பயண சேவைக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது இந்த பிராந்தியத்தில் உள்ள மொத்த விமானங்கள் 795 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை, 2044க்குள் நான்கு மடங்கு உயர்ந்து 3,300 ஆக அதிகரிக்கும். இதில் 'நேரோ பாடி' எனப்படும், குறுகிய அகல விமானங்களின் பங்கு 90 சதவீதம் ஆக இருக்கும். 10 சதவீதம் அளவுக்கு, 'வைட் பாடி' எனப்படும் அகலமான விமானங்கள் தேவைப்படும்.
நடுத்தர வர்க்க வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், விமான நிலையங்கள் மற்றும் இணைப்பு வசதிகளில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் இதற்குக் காரணமாக இருக்கும். விமானப் போக்குவரத்து வளர்ச்சியால், 45,000 விமானிகள், 45,000 தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் 51,000 கேபின் பணியாளர்கள் தேவைப்படுவர்.
சரக்கு விமானங்களின் எண்ணிக்கையும் ஐந்து மடங்கு அதிகரிக்கும். விமான பராமரிப்பு, பழுது நீக்கம், டிஜிட்டல் சேவைகள் மற்றும் பயிற்சி உள்ளிட்டவற்றுக்காக, தெற்கு ஆசியாவில் 17.55 லட்சம் கோடி ரூபாய் முதலீடு தேவைப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan