Paristamil Navigation Paristamil advert login

விஜய், சீமான், ராமதாஸ், கைகோர்க்க உள்ளனர் ! தகவல் வெளியாகியுள்ளது

விஜய், சீமான், ராமதாஸ்,  கைகோர்க்க உள்ளனர் ! தகவல்  வெளியாகியுள்ளது

28 தை 2026 புதன் 14:16 | பார்வைகள் : 588


தமிழக அரசியல் களத்தில் புதிய திருப்பமாக, விஜய்,- ராமதாஸ்,- சீமான் ஆகிய மூவரும் ஒன்றாக கைகோர்க்க உள்ளனர். அதை உறுதிசெய்யும் விதமாக, இதுவரை எதிரியாக நினைத்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, த.வெ.க., தலைவர் விஜய் அழைப்பு விடுத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு ஒரு மாதமே இருக்கும் நிலையில், கூட்டணி, தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில், முக்கிய அரசியல் கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. தொகுதி பங்கீட்டில் சிக்கல் இருந்தாலும், தி.மு.க., கூட்டணி அப்படியே உள்ளது.

அதிரடி  திருப்பம்

அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., மற்றும் தினகரனின் அ.ம.மு.க., இணைந்துள்ளன. தே.மு.தி.க., ராமதாசின் பா.ம.க., பன்னீர்செல்வம் அணி, புதிய தமிழகம் கட்சி ஆகியவை, தங்களது கூட்டணி முடிவை அறிவிக்கவில்லை.

தினகரன் மற்றும் பன்னீர்செல்வத்தை கூட்டணிக்குள் கொண்டு வந்து விடலாம் என, விஜய் நினைத்தார். அதற்கான முயற்சிகளை, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மேற்கொண்டார். அது கைகொடுக்காததால், அ.தி.மு.க., கூட்டணிக்கு தினகரன் போய்விட்டார்.

இந்நிலையில் அதிரடி திருப்பமாக, த.வெ.க., தலைவர் விஜய், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் ஓரணியாக கைகோர்க்க, வியூகம் வகுத்து வரும் தகவல் வெளியாகியுள்ளது.

நான்கு முனை போட்டியில்லாமல், மூன்று முனை போட்டியை உருவாக்கினால் வெற்றி பெற்று விடலாம் என, விஜய் கணக்கு போடுவது தான், இந்த கைகோர்ப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.

புதிய அரசியல் அதிகாரம்

இது தொடர்பாக, நாம் தமிழர் கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:

சீமானும், விஜயும் சினிமா வாயிலாக மக்களுக்கு நன்கு அறிமுகமான பிரபல முகங்கள். இளைஞர்களையும் மாணவர்களையும் இருவரும் ஈர்த்து வைத்துள்ளனர். புதிய அரசியல் அதிகாரத்திற்காக இருவரும் காத்திருக்கின்றனர்.

மறைந்த தி.க., தலைவர் ஈ.வெ.ரா.,வை விஜய் ஆதரிக்கிறார்; சீமான் எதிர்க்கிறார். இப்படி சில கொள்கைகளில் வேறுபட்டாலும், தமிழகத்தில் அரசியல் மாற்றம் தேவை என்பதில் இருவரும் ஒன்றாக உள்ளனர்.

சமீபத்தில், திரைப்பட இயக்குநர் ஒருவரின் மொபைல் போன் வாயிலாக, சீமானுடன் விஜய் பேசியுள்ளார். அப்போது, 'நாம் இருவரும் இணைந்தால், ஆட்சியை பிடித்து விடலாம். 100 தொகுதிகள், துணை முதல்வர், ஆறு அமைச்சர்கள் தருகிறோம். கூட்டணி அமைக்கலாம்' என அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை ஏற்க மறுத்த சீமான், கட்சி துவக்குவதற்கு முன் தன்னை விஜய் சந்தித்தபோது, 'நாம் இருவரும் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படுவோம்; நீங்கள் தான் முதல்வர் பதவி ஏற்க வேண்டும்' என்று கூறியதை நினைவு கூர்ந்துள்ளார்.

விஜய் நம்பிக்கை

அதற்கு விஜய், 'முதல்வர் பதவி எனக்கு கிடைக்கும் என, மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களை ஏமாற்ற முடியாது. எனவே, நீங்கள் விட்டுக் கொடுங்கள்' எனக் கூறியுள்ளார். 'நேரில் சந்தித்து நல்ல முடிவு எடுப்போம்' என சீமான் கூறியுள்ளார். அதனால், விஜய் நம்பிக்கையுடன் இருக்கிறார். அதன்பின், சீமானிடம் மாற்றம் ஏற்படத் துவங்கியுள்ளது. விஜயை விமர்சிப்பதை தவிர்த்து வருகிறார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

அ.தி.மு.க., கூட்டணிக்கு அன்புமணி தலைமையிலான பா.ம.க., சென்றதால், தி.மு.க., கூட்டணிக்கு செல்ல, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் முயன்றார். வி.சி., எதிர்ப்பதால், ராமதாசை சேர்க்க தி.மு.க., மறுத்துவிட்டது. இதனால், தி.மு.க., அரசை விமர்சிக்க துவங்கியுள்ள ராமதாஸ், த.வெ.க.,வுடன் பேச்சு நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து, த.வெ.க., வட்டாரங்கள் கூறியதாவது:

வட மாவட்டங்களில், குறிப்பாக பட்டியலின சமுதாய மத்தியில்தான், விஜய்க்கு செல்வாக்கு அதிகம். கூடுதலாக, வட மாவட்டங்களில் உள்ள வன்னியர் சமூக ஓட்டுகளை பெற்றால் வெற்றி பெறலாம் என்பதே விஜய் கணக்கு.

பா.ம.க., ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன், விஜய்க்கு மிக நெருக்கமானவர். அவர் மூலமாக, ராமதாசுடன் நேரடியாக விஜய் தரப்பில் பேசப்படுகிறது. கூட்டணிக்கு ராமதாஸ் பச்சைக்கொடி காட்டிவிட்டால், தைலாபுரம் தோட்டத்துக்கே விஜய் செல்ல உள்ளார்.

இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.

விஜயுடன் ராமதாஸ், சீமான் இணைந்தால், அது பலமிக்க அணியாக மாறும். வலுவான மும்முனையை போட்டியை ஏற்படுத்தும். யார் வெற்றி பெறுவர் என கணிக்க முடியாத நிலை ஏற்படும். யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையும் உருவாகலாம் என, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வர்த்தக‌ விளம்பரங்கள்