Paristamil Navigation Paristamil advert login

தொலைநோக்கு பார்வையுடன் விரிவான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்; பிரதமர் மோடி

தொலைநோக்கு பார்வையுடன் விரிவான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்; பிரதமர் மோடி

28 தை 2026 புதன் 12:05 | பார்வைகள் : 596


தொலைநோக்கு பார்வையுடன் ஐரோப்பிய யூனியனுடன், ஒரு விரிவான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி பூரிப்புடன் கூறி உள்ளார்.

ஆண்டுகால பேச்சுக்கு பின்னர் தலைநகர் புதுடில்லியில், இந்தியா- ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளது. இதை தொடர்ந்து ஐரோப்பிய யூனியன்-இந்தியா இடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்திய உற்பத்தி துறைக்கு இந்த வர்த்தக ஒப்பந்தம் பெரும் ஊக்கத்தை வழங்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந் நிலையில், தொலைநோக்கு பார்வையுடன் இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளதாக பிரதமர் மோடி கூறி உள்ளார். ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து அவர் மேலும் கூறியதாவது;

ஐரோப்பிய யூனியனில் இந்தியாவின் முதலீடு கிட்டத்தட்ட 40 பில்லியன் யூரோக்களை எட்டி இருக்கிறது. ஆராய்ச்சி, உற்பத்தி, சேவைகள் உள்பட ஒவ்வொரு துறையிலும் இந்தியாவுக்கும், ஐரோப்பிய நிறுவனங்களுக்கும் இடையே ஆழமான ஒத்துழைப்பு இருக்கிறது. இதன் உந்துசக்தியாகவும், பயனாளிகளாகவும், வணிக தலைவர்கள் உள்ளனர்.

இதுவே கூட்டாண்மையை முழுமையான வகையில் சமூக பங்களிப்பு என மாற்றுவதற்கான சரியான நேரம் ஆகும். இந்த தொலைநோக்கு பார்வையுடன், இன்று நாங்கள் ஒரு விரிவான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்து இருக்கிறோம். இதன் மூலம், இந்தியாவில் உருவாக்கப்படும் பொருட்கள் ஐரோப்பிய வர்த்தக சந்தையில் எளிதாக கொண்டு செல்லப்படும்.

ஜவுளிகள், ரத்தின கற்கள், நகைகள், வாகன உதிரிபாகங்கள், என்ஜினியிரிங் பொருட்கள் போன்றவை இந்த பொருட்களில் அடங்கும். மேலும், பழங்கள், காய்கறிகள்,  பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள், கடல்சார் பொருட்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நமது விவசாயிகள், மீனவர்கள் நேரடியாக பயன்பெறுவர். நமது சேவைத்துறையும் பயனடையும்.

குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், கல்வி, பாரம்பரிய மருத்துவம் மற்றும் வர்த்தக சேவைகள் துறைகளும் பயனடையும்.  உலகளாவிய வர்த்தகத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன.

ஒவ்வொரு நிறுவனமும் தனது சந்தை உத்தியையும், கூட்டாளிகளையும் மறுமதிப்பீடு செய்து வருகிறது. இத்தகைய நேரத்தில், இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வணிக உலகிற்கு ஒரு தெளிவான, ஆரோக்கியமான செய்தியை அளிக்கிறது.

இருதரப்பு வர்த்தக சமூகங்களும் திறமையான, நம்பிக்கையான மற்றும் எதிர்காலத்தை நோக்கிய கூட்டாண்மையை உருவாக்க ஒரு தெளிவான அழைப்பாகும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்