Paristamil Navigation Paristamil advert login

த.வெ.க., ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கடும் எதிர்ப்பு

த.வெ.க., ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கடும் எதிர்ப்பு

27 தை 2026 செவ்வாய் 12:03 | பார்வைகள் : 1136


விடுதலை சிறுத்தைகள் குறித்து பேசிய ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும் என, வி.சி.க.,வினர் தெரிவித்துள்ளனர்.

மாமல்லபுரத்தில் நடந்த த.வெ.க., செயல்வீரர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா பேசும்போது, வி.சி., தலைவர் திருமாவளவனுடன் இருப்பது வெறும் 20 பேர் மட்டுமே. அவரை அடியாள் போன்று தி.மு.க., நடத்துகிறது, என்றார்.

இதற்கு, வி.சி.க.,வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். த.வெ.க., தலைவர் விஜயும், 'தேவையில்லாமல் வி.சி.க.,வினரை ஏன் சீண்ட வேண்டும்? என அறிவுறுத்த, ஆதவ் அர்ஜுனா நேற்று முன்தினம் இரவு, அறிக்கை வெளியிட்டார்.

அதில், திருமாவளவன் மீது எனக்கு மரியாதை உண்டு. வி.சி.க.,வில், தி.மு.க.,வின் குரலாக செயல்படும் 20 நபர்களை குறிப்பிட்டு தான் பேசினேன்.  ஆனால், என் கருத்து தவறாக சித்தரிக்கப்படுகிறது. தி.மு.க.,வின் திரிபு அரசியலில், வி.சி.க.,வினர் சிக்கி விடக்கூடாது என தெரிவித்தார்.

ஆனாலும், வி.சி.க., வினர் ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையென்றால், அவர் எந்த ஊருக்கு பிரசாரத்திற்கு வந்தாலும் முற்றுகையிடுவோம். அவர் மன்னிப்பு கேட்பது, த.வெ.க.,விற்கும் நல்லது என கூறியுள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்