சுதீஷ், கிருஷ்ணசாமியுடன் பா.ஜ., கூட்டணி பேச்சு
27 தை 2026 செவ்வாய் 10:45 | பார்வைகள் : 932
கவர்னர் தேநீர் விருந்தில் பங்கேற்ற தே.மு.தி.க., பொருளாளர் சுதீஷ், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோரை, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தனித்தனியே சந்தித்து நீண்ட நேரம் பேசினார். அப்போது, கூட்டணி குறித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் அறிவிப்பு, அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
அ.தி.மு.க., - பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், பா.ம.க., - அ.ம.மு.க., த.மா.கா., போன்ற கட்சிகள் இணைந்துள்ளன.
மேலும் சில கட்சிகளை கொண்டு வர முயற்சிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக, பிரேமலதா தலைமையிலான தே.மு.தி.க.,வையும், கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சியையும் சேர்க்க, பேச்சு நடந்து வருகிறது.
இந்நிலையில், குடியரசு தினத்தையொட்டி, கவர்னர் மாளிகை சார்பில், தேநீர் விருந்துக்கு கவர்னர் ஏற்பாடு செய்திருந்தார்.
தேநீர் விருந்து முடிந்ததும், நயினார் நாகேந்திரன், பா.ஜ., மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோர், சுதீஷிடம் 10 நிமிடங்களுக்கும் மேலாக தனியே பேசினர்.
கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகித்தபோது ஏற்பட்ட மனக்கசப்புகள் தொடர்பாக, நயினாரிடம் சுதீஷ் மனம் விட்டு பேசியதாக கூறப்படுகிறது. அதேபோல், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியுடனும், நயினார் நாகேந்திரன், அரவிந்த் மேனன் தனியே பேசினர். சந்திப்பு முடிந்து புறப்பட்டபோது, இது குறித்து பதில் அளிக்க, சுதீஷ் மறுத்து விட்டார்.
நயினார் நாகேந்திரன் கூறுகையில்,
தே.மு.தி.க. பொருளாளர் சுதீஷ் எனக்கு நல்ல நண்பர். தற்செயலாக இந்த நிகழ்வில் சந்தித்தோம். அப்போது, அரசியல் எதுவும் பேசவே இல்லை. இன்று நடந்தது முழுக்க முழுக்க தேநீர் விருந்து தான்,'' என்றார்






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan