உரிய மரியாதை, அதிக தொகுதிகள் கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி; பிரேமலதா பேச்சு
27 தை 2026 செவ்வாய் 09:44 | பார்வைகள் : 612
உரிய மரியாதை, அதிக தொகுதிகள் கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி என அருப்புக்கோட்டையில் நடந்த உள்ளம் தேடி இல்லம் நாடி நிகழ்ச்சியில் பங்கேற்ற தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்தார். -
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
அருப்புக்கோட்டை நெசவாளர்கள் அதிகம் உள்ள பகுதி. நெசவாளர்கள் நன்றாக இருந்தால் தான் நாடு நன்றாக இருக்கும். நெசவாளர்கள் கஷ்டப்பட்ட காலத்தில் ஒரு கட்சியினர் பிரியாணி வழங்கியும், மற்றொரு கட்சியினர் கஞ்சி தொட்டியும் திறந்தனர். ஆனால் தே.மு.தி.க., நிறுவனர் விஜயகாந்த் நெசவாளர்கள் வாழ வேண்டும் என்பதற்காக ரூ.10 லட்சத்திற்கு நெசவாளர்கள் நெய்த ஜவுளிகளை வாங்கினார்.
இதே அருப்புக்கோட்டை தொகுதியில் உள்ள ராமானுஜபுரத்தில் பிறந்து வளர்ந்தவர் விஜயகாந்த். இந்த தொகுதியில் எம்.பி., தேர்தலில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் அந்த உண்மை மறைக்கப்பட்டு வெற்றி செல்லாது என அறிவித்துள்ளனர்.
நான் அருப்புக்கோட்டை மக்களுக்கு துணை நின்று இந்த தொகுதிக்கு என்றும் நல்லது செய்வேன். 2026 தேர்தலில் நல்லது நடக்கும். மகத்தான கூட்டணி அமைப்போம். அது மக்கள் விரும்பும் கூட்டணியாக இருக்கும் என்றார்.
பின் அவர் அளித்த பேட்டி: அனைத்து கட்சிகளுடன் தோழமையாக உள்ளோம். உரிய மரியாதை, அதிக தொகுதிகள் கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம். விஜயபிரபாகரன் தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் என இன்னும் முடிவு செய்யவில்லை. நல்ல முடிவு எடுத்து கூட்டணி அமைப்போம். எங்கள் கட்சிக்கு உரிய இடங்களை பெற்று கூட்டணி அமைப்போம் என்றார்.
முன்னதாக செம்பட்டியில் கட்சி கொடியை ஏற்றி முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து அவர் மரியாதை செய்தார். மாவட்ட செயலாளர் ராமர் பாண்டி, நகர் செயலாளர் நவநீத கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் சந்திரமோகன், தங்கப்பாண்டி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan