ஜன நாயகன் திரைப்படத்தில் கௌரவ தோற்றத்தில் லோகேஷ்
26 தை 2026 திங்கள் 14:52 | பார்வைகள் : 200
'மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி' படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், தற்போது 'டிசி' எனும் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். அதனை முடித்ததும் தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடிக்கும் 23வது படத்தை இயக்க உள்ளார். இந்த நிலையில், சென்னையில் அவர் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார்.
செய்தியாளர்களிடம் லோகேஷ் கனகராஜ் கூறியதாவது: ஆயிரம் விமர்சனங்களை கடந்து கூலி படம் ஓடியதற்கு மக்களுக்கு நன்றி. கூலிக்கு வந்த விமர்சனங்களை ஆராய்ந்துள்ளேன். என்னிடம் இருந்து மக்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என புரிந்து கொண்டேன். இனிமேல் விமர்சனங்கள் இல்லாத வகையில் படம் எடுக்க முடிவு செய்துள்ளேன்.
கூலி வெளியான பின்பு ரஜினி, கமல் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இதற்காக நல்ல கதையை எழுதிவிட்டு இருவருக்கும் தனியாக சென்று கதை சொன்னேன். தொடர்ந்து ஆக்ஷன் படத்தை இருவரும் செய்து வந்தார்கள். அதனால் அவர்கள் வேறு ஒரு யதார்த்தமான படத்தை யோசித்தார்கள். அது எனக்கு பண்ண வராது என சொல்லி வெளியே வந்துவிட்டேன். எனக்கும் கைதி இரண்டாம் பாகம் இருந்தது. அதற்குள் 'கைதி 2'க்கு கொடுத்திருந்த தேதியை கார்த்தி, வேறு படங்களுக்கு கொடுத்துவிட்டார்.
அந்த இடைவெளியில் மைத்ரி பிக்சர்ஸ் நிறுவனம் 6 ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தார்கள். அவர்களுடன் படம் பண்ண முடிவு செய்து அவர்கள் தயாரிப்பில் அல்லு அர்ஜூன் நடிக்கும் படம் முடிவானது. 'கைதி 2' படத்தில் அதிக சம்பளம் கேட்டேன் என்பது வதந்தி. 'எல்சியு' (லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்) மூடப்படவில்லை; இனிமேல் தான் தொடங்குகிறது. 'கைதி 2, விக்ரம் 2, ரோலக்ஸ்' படங்கள் பண்ணாமல் நான் போக முடியாது. இனி, எல்சியு சம்பந்தப்பட்ட படங்கள் வந்துக்கொண்டே இருக்கும். அமீர்கானுடன் சேர்ந்து படம் இயக்குவது பேச்சுவார்த்தையில் இருக்கிறது.
விமர்சனங்களை தனிப்பட்ட விதத்தில் எடுத்துக் கொள்ளமாட்டேன், பாராட்டுகளைப் போல் விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். என் மீதான விமர்சனங்கள் என்பது அக்கறையாகவே பார்க்கிறேன். 'டிசி' படத்திற்கு பிறகு இனிமேல் இயக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளேன். சமூக ஊடகங்களையும், அதில் வரும் எதிர்மறையான விமர்சனங்களையும் தடுக்க முடியாது.
'ஜனநாயகன்' படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளேன். மற்ற விவரங்களை அதன் இயக்குனர் எச்.வினோத்திடம் தான் கேட்க வேண்டும். 'கூலி' படத்துக்கு 'ஏ' சான்றிதழ் வாங்கியது எனது நோக்கம் இல்லை. கூலி படத்துக்கு சென்சார் போர்டு 35 கட் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. சினிமாவில் வன்முறை என்பதைவிட அதனை ஆக்ஷனாகவே பார்க்கிறேன். என் படங்களில் வன்முறை இருப்பதாக சொல்கிறார்கள். எனக்கும் ஒரு சமூக பொறுப்பு வேண்டும் என்கிறார்கள். எனக்கு சமூக பொறுப்பு உள்ளது; அதே போல் படம் பார்ப்பவர்களுக்கும் ஒரு பொறுப்பு வேண்டும் அல்லவா.
அரசியலுக்கும் எனக்கும் தொடர்பில்லை, விஜய் பிரச்சாரத்திற்கு செல்ல மாட்டேன். கூலி 35 நாட்களுக்கு மேல் ஓடியது, லாபகரமான படம் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. ரஜினி, கமல் இருவரையும் சமூக வலைதளத்தில் அன்பாலோ பண்ணிட்டேனு சொல்லி விமர்சனங்கள் வந்தது. இருவருடனும் இணைந்து படம் பண்ணியதே பெரிய பாக்கியம். அப்படியிருக்கையில் அவர்களை எப்படி அன்பாலோ செய்வேன்? அதில் உண்மையில்லை. இதுபோன்ற விஷயங்களை என்னிடமோ, என் குழுவினரிடமோ கேட்டு செய்தி வெளியிடுங்கள்.
போதை பொருட்கள் வேண்டாம் என என்னால் முடிந்த அளவிற்கு உரக்க சொல்கிறேன், போதைக்கு எதிராக தொடர்ந்து விழிப்புணர்வு செய்து வருகிறேன். எனது படங்களில் போதை பொருள் காட்டுவதால் அதிகம் பாதிப்பு ஏற்படுகிறது என்றால், அதனை நான் படங்களில் நிறுத்திவிட்டால் மாறிவிடும் என்றால் நானும் நிறுத்திக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan