Paristamil Navigation Paristamil advert login

பா.ம.க., இருக்குமிடத்தில் வி.சி., இருக்காது: திருமாவளவன்

பா.ம.க., இருக்குமிடத்தில் வி.சி., இருக்காது: திருமாவளவன்

26 தை 2026 திங்கள் 13:33 | பார்வைகள் : 1220


தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இடம் பெற்றால், நாங்கள் அக்கூட்டணியில் இருக்க மாட்டோம், என, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறினார்.

திருச்சியில் நேற்று அவர் அளித்த பேட்டி:

ஜனநாயக சக்திகள், அவரவர் தாய்மொழியை, கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும். தேவையானால், போராட வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை, தமிழகத்தில் அ.தி.மு.க., தலைமை வகிக்கவில்லை. பழனிசாமியும் அதை ஒப்புக் கொண்டவர் போலவே பேசுகிறார்.

தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி ஆட்சி மலரும்' என்றே பேசுகிறார். மாபெரும் மக்கள் சக்தி கொண்ட அக்கட்சியால், தங்கள் கட்சியே ஆட்சி அமைக்கும் என சொல்ல முடியவில்லை.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், எந்த கூட்டணியில் சேர வேண்டும் என்பது குறித்து, அவர் தான் முடிவெடுக்க வேண்டும். கடந்த 2011ல், ஜாதி-மதத்தின் பெயரால் வெறுப்பு அரசியலை முன்னெடுக்கும் கட்சியுடன் கூட்டணி கிடையாது என, வி.சி.,க்கள் சார்பில் முடிவெடுத்துள்ளோம். அதில், இன்றும் உறுதியாக இருக்கிறோம்.

பா.ம.க.,வின் ஒரு அணி தே.ஜ., கூட்டணியில் உள்ளது. இன்னொரு அணியை, தி.மு.க., கூட்டணியில் சேர்ப்பது குறித்து, முதல்வர் ஸ்டாலின் தான் முடிவெடுக்க வேண்டும்

மத்திய பா.ஜ., அரசையோ, அதன் செயல்பாடுகளையோ த.வெ.க., தலைவர் விஜய் விமர்சிப்பதில்லை; எதிர்க்கிறோம் என்று மட்டும் சொல்கிறார். அதற்கான காரணம் கூறவில்லை. இந்த தேர்தலில் த.வெ.க., தனித்துதான் போட்டியிடும் என தெரிகிறது.

மத்திய அரசு திட்டங்களுக்கு மட்டுமே, பா.ஜ., அரசு நிதி ஒதுக்குகிறது. மாநில அரசின் திட்டங்களான கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு, மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால், நிதி தர முடியாது என, மத்திய அமைச்சர் வெளிப்படையாக கூறுகிறார்.

தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையாக நடத்துகிறது. தி.மு.க.,விடம் இரண்டு இலக்கத்தில் தொகுதிகள் கேட்கிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்