Paristamil Navigation Paristamil advert login

ஜப்பானிலிருந்து சீனாவுக்கு திருப்பி அனுப்பப்படும் பாண்டாக்கள்

ஜப்பானிலிருந்து சீனாவுக்கு திருப்பி அனுப்பப்படும் பாண்டாக்கள்

25 தை 2026 ஞாயிறு 15:48 | பார்வைகள் : 847


ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக, ஜப்பானில் எஞ்சியிருந்த கடைசி இரண்டு பாண்டா கரடிகளான 'சியாவோ சியாவோ' (Xiao Xiao) மற்றும் 'லெய் லெய்' (Lei Lei) ஆகியவை இந்த வாரம் சீனாவுக்குத் திருப்பி அனுப்பப்படுகின்றன. இதனால் கடந்த 50 ஆண்டுகளில் முதன்முறையாக ஜப்பான் பாண்டா கரடிகள் இல்லாத நாடாக மாறவுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் பொதுக் காட்சிப்படுத்தலில் ஆயிரக்கணக்கான ஜப்பானிய ரசிகர்கள் கலந்துகொண்டனர். ஒரு நிமிடம் மட்டுமே பாண்டா  கரடிகளை பார்க்க அனுமதி இருந்தபோதிலும், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அவற்றுக்கு விடை கொடுத்தனர்.

பாண்டா உருவம் பொறித்த ஆடைகள் மற்றும் பொம்மைகளுடன் வந்திருந்த ரசிகர்கள், தமது கைபேசிகளில் அவற்றின் ஒவ்வொரு அசைவையும் படம் பிடித்து மகிழ்ந்தனர்.

தகாஹிரோ தகாவுஜி எனும் தீவிர ரசிகர் கடந்த 15 ஆண்டுகளில் பாண்டாக்களை 1 கோடி முறை புகைப்படம் எடுத்து சாதனை படைத்துள்ளார். "இவை என் சொந்தக் குழந்தைகளைப் போன்றது" என அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

1972-இல் ஜப்பான் - சீனா உறவு சீரானதைக் குறிக்கும் வகையில் சீனா முதன்முதலில் பாண்டா கரடிகளை பரிசாக வழங்கியது.

அதன் பின்னர் இவை ஜப்பானின் தேசிய அடையாளமாகவே மாறின.
தாய்வான் விவகாரத்தில் ஜப்பானின் புதிய பிரதமர் சனே தகாய்ச்சியின் கருத்துக்கள் சீனாவுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால் புதிய பாண்டாக்களை வழங்க சீனா மறுத்து வருகிறது.

பாண்டாக்கள் இல்லாததால் ஜப்பானுக்கு ஆண்டுக்கு சுமார் 20 பில்லியன் யென் வருமான இழப்பு ஏற்படும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்