Paristamil Navigation Paristamil advert login

இந்தோனேசியாவில் மலை மீது விமானம் மோதி விபத்து - சடலங்கள் மீட்பு

 இந்தோனேசியாவில்  மலை மீது  விமானம் மோதி விபத்து -  சடலங்கள் மீட்பு

24 தை 2026 சனி 16:39 | பார்வைகள் : 618


இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள யோக்யகர்த்தா நகரிலிருந்து தெற்கு சுலவாசி மாகாணத்திற்கான கண்காணிப்பு பணிக்காக புறப்பட்ட சிறிய ரக விமானம் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளாகி, அதில் பயணம் செய்த 10 பேரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (ஜனவரி 17) புறப்பட்ட இந்த ATR 42-500 வகை விமானம், தெற்கு சுலவாசி மாகாணத்தின் மரோஸ் மற்றும் பாங்க்கெப் மாவட்டங்களுக்கிடையிலான வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோது, பிற்பகல் 1.30 மணியளவில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. மலைப்பாங்கான பகுதியில் பறந்துகொண்டிருந்த நிலையிலேயே தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, விமானம் மாயமானதாக அறிவிக்கப்பட்டு, தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. கிட்டத்தட்ட ஒரு வாரம் நீடித்த தேடுதல் நடவடிக்கைகளின் பின்னர், பண்டிமுருங்–புலுசராங் தேசிய பூங்காவிற்குட்பட்ட புலுசராங் மலைப்பகுதியில் விமானம் மோதி விபத்துக்குள்ளானது கண்டறியப்பட்டது.

மீட்பு குழுக்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, விமானத்தில் பயணம் செய்திருந்த ஏழு விமானக் குழு உறுப்பினர்கள் மற்றும் இந்தோனேசிய கடல் மற்றும் மீன்வள அமைச்சின் மூன்று அதிகாரிகள் உட்பட மொத்தம் 10 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. கடைசி இரண்டு சடலங்கள் ஜனவரி 23 ஆம் திகதி அதிகாலை மீட்கப்பட்டதாக தெற்கு சுலவாசி மீட்பு அமைப்பின் அதிகாரி ஆண்டி சுல்தான் தெரிவித்தார்.

விபத்து ஏற்பட்ட இடம் மிகவும் மலைப்பாங்கானதும் அடர்ந்த காடுகளைக் கொண்டதும் என்பதால், மீட்பு பணிகள் கடினமாக இருந்ததாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். முன்னதாக விமானத்தின் சிதைவுகள் மலை சரிவுகளில் சிதறிக்கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.

இதனிடையே, விமானத்தின் “பிளைட் டேட்டா ரெக்கோர்டர்” (கருப்பு பெட்டி) விபத்திடத்திற்கு அருகில், மலை உச்சியிலிருந்து சுமார் 150 மீற்றர் கீழ் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அது நல்ல நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கருவி தற்போது தேடுதல் மற்றும் மீட்பு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த விமானம், மீன்பிடி பகுதிகளை கண்காணிக்கும் வான்வழி பணிக்காக இந்தோனேசிய கடல் மற்றும் மீன்வள அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. விமானம் முறையான பராமரிப்பு மற்றும் ஆய்வுகளுக்குப் பின்னரே சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

விபத்துக்கான காரணம் தொடர்பில் இந்தோனேசிய தேசிய போக்குவரத்து பாதுகாப்பு குழு (KNKT) மற்றும் விமான போக்குவரத்து துறை இணைந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.

கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்தோனேசியாவில் ATR 42 வகை விமானம் தொடர்பான உயிரிழப்புகளுடன் கூடிய விபத்து இது முதல் முறை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2015 ஆம் ஆண்டு பப்புவாவில் ATR 42-300 விமானம் விபத்துக்குள்ளாகி, அதில் பயணம் செய்த 54 பேரும் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்