கேரளாவின் வளர்ச்சிக்காக மத்திய அரசு செய்த முயற்சிகளுக்கு பலன்: பிரதமர் மோடி
24 தை 2026 சனி 05:19 | பார்வைகள் : 726
கேரளாவின் வளர்ச்சிக்காக மத்திய அரசு செய்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்க தொடங்கி உள்ளது பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கேரளா சென்ற பிரதமர் மோடி பல்வேறு வளரச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அவர் திருவனந்தபுரத்தில் 3 அம்ரித் பாரத் ரயில்கள் உட்பட 4 புதிய ரயில்கள் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தாம்பரம்- திருவனந்தபுரம், நாகர்கோவில்- மங்களூரு, திருவனந்தபுரம்- சார்லப்பள்ளி இடையே 3 ரயில்கள் இயக்கப்படுகின்றன.
பின்னர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
கேரளாவின் வளர்ச்சிக்கான மத்திய அரசின் முயற்சிகள் புதிய உத்வேகத்தைப் பெற்றுள்ளன. இன்று முதல், கேரளாவின் ரயில் இணைப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தை நாட்டின் முக்கிய ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் மையமாக மாற்ற, குறிப்பிடத்தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க கூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தெரு வியாபாரிகளின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. பொருட்களை வாங்குவதற்காக, அவர்கள் பெரும்பாலும் மிக அதிக வட்டி விகிதத்தில் சிறிய தொகையைக் கடனாகப் பெற வேண்டியிருந்தது.
முதன்முறையாக, மத்திய அரசு பிஎம் ஸ்வநிதி யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான தெரு வியாபாரிகள் வங்கிக் கடன்களைப் பெற்றனர். அவர்களில் பலர் தங்கள் வாழ்நாளில் முதல் முறையாகக் கடன் பெற்றனர். ஒரு படி மேலே சென்று, மத்திய அரசு தெரு வியாபாரிகளுக்கென்றே பிரத்யேகமாக ஒரு கடன் அட்டையையும் அறிமுகப்படுத்தியது. இங்கு பயனாளிகளுக்கு பிஎம் ஸ்வநிதி கடன் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
முக்கியப் பங்கு
வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்காக, முழு நாடும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த வளர்ச்சியில் நமது நகரங்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளன. கடந்த 11 ஆண்டுகளாக, நமது அரசு நகர்ப்புற உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்துள்ளது. கேரளாவின் வளர்ச்சிக்காக மத்திய அரசு செய்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்க தொடங்கி உள்ளது.
மாற்றங்கள் நிகழும்
நான்கு தசாப்தங்களுக்கும் மேலான இடதுசாரி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜ வெற்றி பெற்றுள்ளது. கேரளாவில் வரும் சட்டசபை தேர்தலில் மாற்றங்கள் நிகழும், மக்கள் பாஜ மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்.
திருவனந்தபுரத்தில் சமீபத்தில் பெற்ற வெற்றியைப் போலவே, 1987ல், முதல் முறையாக ஆமதாபாத் மாநகராட்சியை பாஜ கைப்பற்றியது. அன்று முதல், குஜராத் மக்கள் எங்களுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளனர், மேலும் நாங்கள் பல தசாப்தங்களாக அதைத் தொடர்ந்து செய்து வருகிறோம்.
முன்மாதிரி நகரம்
குஜராத்தில் ஒரு நகரத்தில் எங்கள் பயணம் தொடங்கியது. அதேபோல், கேரளாவிலும் எங்கள் தொடக்கம் ஒரு நகரத்தில் தொடங்கியுள்ளது. இடதுசாரிகளும், காங்கிரசும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தொடர்ந்து தோல்வியடைந்துள்ளன. பாஜவினர் திருவனந்தபுரத்தில் வளர்ச்சியை கொண்டு வர பணியாற்ற தொடங்கி விட்டனர்.
இந்த நகர மக்களுக்கு நான் சொல்கிறேன். நம்பிக்கை வையுங்கள், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட மாற்றம் இறுதியாக வரவிருக்கிறது. திருவனந்தபுரம், இந்த முழு நாட்டிற்கும் ஒரு முன்மாதிரி நகரமாக மாறும். திருவனந்த புரத்தை இந்தியாவின் சிறந்த நகரங்களில் ஒன்றாக மாற்றுவதற்கு எனது முழு ஆதரவையும் அளிக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
மிகுந்த பெருமை
பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேரளா முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது: கடவுளின் சொந்த நாடான கேரளத்திற்கு பிரதமர் மோடியை மிகுந்த பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் வரவேற்கிறேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் பல திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி கேரளாவிற்கு வந்திருப்பது எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சி. இந்தத் திட்டங்கள் பலவற்றிற்கு மத்திய அரசின் ஒப்புதலை நாங்கள் தொடர்ந்து கோரி வந்த நிலையில், இது மாநில அரசுக்கு மிகுந்த திருப்தி அளிக்கும் ஒரு தருணமாகும்.
நன்றி
இந்தத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்த பிரதமருக்கு இந்தத் தருணத்தில் எங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அக்கறையும் நல்லெண்ணமும் வரும் காலங்களிலும் கேரளத்திற்குத் தொடர்ந்து காட்டப்படும் என்று நம்புகிறேன். பல்வேறு துறைகள் தொடர்பான கேரளத்தின் நியாயமான கோரிக்கைகளும் உரிய நேரத்தில் நிறைவேற்றப்படுவதை பிரதமர் மோடி உறுதி செய்வார் என்றும் நம்புகிறேன். இவ்வாறு கேரளா முதல்வர் பினராயி விஜயன் பேசினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan