பசி எடுக்கும்போது மிக வேகமாக கோபம் வருவது ஏன்?
23 தை 2026 வெள்ளி 15:26 | பார்வைகள் : 170
நம்மில் பலருக்கும் இந்த அனுபவம் கட்டாயம் இருக்கும். மதிய உணவு லேட்டானாலோ அல்லது வேலைப்பளுவில் சாப்பிட மறந்துவிட்டாலோ, சட்டென்று எரிச்சல் வரும், சின்ன விஷயத்திற்கு கூட கோபம் பொத்துக்கொண்டு வரும். ஆங்கிலத்தில் இதை 'Hangry' (Hunger + Angry) என்று அழைக்கிறார்கள்.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வு, ஏன் சிலருக்கு மட்டும் பசி எடுக்கும்போது மிக வேகமாக கோபம் வருகிறது, மற்றவர்கள் எப்படி நிதானமாக இருக்கிறார்கள் என்பதற்கான சுவாரஸ்யமான காரணங்களை கண்டறிந்துள்ளது.
பொதுவாக, ரத்தத்தில் சர்க்கரை அளவு (Blood Sugar) குறைவதால் தான் கோபம் வருகிறது என்று நாம் நினைப்போம். ஆனால், 90 ஆரோக்கியமான நபர்களை கொண்டு ஒரு மாதம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஒரு புதிய விஷயம் தெரியவந்துள்ளது என்கிறது ஆய்வு.
வெறும் குறைந்த ரத்த சர்க்கரை அளவு மட்டும் கோபத்தைத் தூண்டுவதில்லை.
பசியை நாம் எப்போது மனப்பூர்வமாக உணர்கிறோமோ, அப்போதுதான் நம்முடைய மனநிலை (Mood) மாறத் தொடங்குகிறது என்பது தான் அது.
'நமது உடலுக்குள் நடக்கும் மாற்றங்களை உதாரணமாக, இதயத் துடிப்பு, தாகம், பசி துல்லியமாக உணரும் திறனுக்கு 'இன்டெரோசெப்ஷன்' என்று பெயர்.
உணரும் திறன் மிக்கவர்கள்: தன் உடலின் சமிக்கைகளை (Signals) சரியாக புரிந்துகொள்பவர்கள், பசி எடுக்கும்போது "ஓ, இப்போது எனக்குப் பசிக்கிறது, அதனால் தான் எனக்கு எரிச்சல் வருகிறது" என்று உணர்ந்து கொள்கிறார்கள். இதனால் அவர்கள் தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி நிதானமாக இருக்க முடிகிறது.
கவனிக்கத் தவறுபவர்கள்: உடலின் தேவையை சரியாகக் கவனிக்காதவர்கள், பசி ஒரு கட்டத்தை மீறும்போது திடீரெனக் கோபமடைந்து விடுகிறார்கள். இவர்களுக்குத் தன் கோபத்திற்கான காரணம் பசிதான் என்பதே தெரிவதில்லை.
குழந்தைகள் ஏன் அடம் பிடிக்கிறார்கள்? விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் தங்களுக்குப் பசிப்பதையோ, தாகம் எடுப்பதையோ பெரும்பாலும் உணர்வதில்லை. அவர்கள் மூளை அந்த சமிக்கைகளைச் சரியாகப் புரிந்துகொள்ளாததால், திடீரென அழுகையாகவோ அல்லது பிடிவாதமாகவோ அது வெளிப்படுகிறது. பெரியவர்களும்கூட வேலை நெருக்கடியில் இருக்கும்போது இதே போன்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
உடல் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்: வேலைக்கு நடுவே உங்கள் உடல் என்ன சொல்கிறது என்று கவனியுங்கள். லேசான தலைவலி அல்லது சோர்வு தெரிந்தால் அது பசியின் அறிகுறியாக இருக்கலாம்.சரியான நேரத்திற்கு சாப்பிடுங்கள்: பசி எடுக்கும் வரை காத்திருக்காமல், ஒரு சீரான கால இடைவெளியில் உணவு உண்பது ரத்த சர்க்கரை திடீரெனக் குறைவதைத் தடுக்கும்.
உடற்பயிற்சி: வழக்கமான உடற்பயிற்சி, உங்கள் உடலின் ஆற்றலைச் சீராக வைத்திருக்கவும், உடலின் சமிக்கைகளைச் சரியாகப் புரிந்துகொள்ளவும் உதவுகிறது.
முன்கூட்டியே திட்டமிடுங்கள்: வெளியில் செல்லும்போதோ அல்லது வேலை அதிகமாக இருக்கும்போதோ, ஒரு சிறிய சிற்றுண்டியை (Healthy snacks) கைவசம் வைத்திருப்பது திடீர் கோபத்தை தவிர்க்க உதவும்.சுருக்கமாகச் சொன்னால், உங்கள் வயிறு பேசுவதை கொஞ்சம் காது கொடுத்து கேட்டால், தேவையற்ற கோபத்தையும் மன அழுத்தத்தையும் தவிர்த்துவிடலாம் என்கிறது ஆய்வு.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan