Paristamil Navigation Paristamil advert login

உயிரை பறித்த சர்ச்சை வீடியோ பதிவிட்ட பெண் கைது

உயிரை பறித்த சர்ச்சை வீடியோ பதிவிட்ட பெண் கைது

22 தை 2026 வியாழன் 11:38 | பார்வைகள் : 104


சமூக வலைதளத்தில்  தன்னைப்பற்றி சர்ச்சை வீடியோ வெளியானதால்  கேரள நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட  நிலையில், அதனை பதிவிட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கேரளாவின் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் தீபக்,42. இவர் அங்குள்ள ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். குடும்பத்துடன் கோவிந்தபுரத்தில் வசித்து வந்த அவர், கடந்த 14ம் தேதி மாநில அரசு பஸ்சில் கண்ணூருக்கு சென்றார். அப்போது தீபக்குடன், அதே பஸ்சில் பயணம் செய்த 35 வயதான ஷிம்ஜிதா  முஸ்தபா என்ற பெண் பயணி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், பஸ்சில் பயணிக்கும் போது தீபக் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவரது தொடுதல் தற்செயலாக நடக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.  இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதனையறிந்து மன உளைச்சலுக்கு  உள்ளான தீபக்  கடந்த 18 ம் தேதி காலை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

சமுக வலைதள புகழுக்காக ஷிம்ஜிதா முஸ்தபா,  தீபக்கின் நற்பெயரைக் கெடுத்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக அப்பெண் மீது தீபக்கின் தாயார் போலீசில் புகார் அளித்தார். இதனடிப்படையில் தற்கொலைக்கு தூண்டியதாக ஷிம்ஜிதா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது.

இதனையடுத்து ஷிம்ஜிதா முஸ்தபா தலைமறைவானார்.  அவரை போலீசார் தேடி வந்த நிலையில்  கோழிக்கோட்டின் வடகாரா பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த  ஷிம்ஜிதாவை கைது செய்தனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்