Paristamil Navigation Paristamil advert login

2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த நாடு என்ற இலக்கை இந்தியா அடையும்; சிபிஆர்

2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த நாடு என்ற இலக்கை இந்தியா அடையும்; சிபிஆர்

22 தை 2026 வியாழன் 10:31 | பார்வைகள் : 106


2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த நாடு என்ற இலக்கை இந்தியா அடையும் என துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள சி.எம்.ஆர் தொழில்நுட்ப நிறுவனத்தின் வெள்ளி விழா கொண்டாட்டத்தில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். தொழில்நுட்பத் துறையில் வரும் வியத்தகு மாற்றங்களுக்கு ஏற்ப கல்வி நிறுவனங்களும், மாணவர்களும் தயாராக வேண்டும். தொழில்துறையில் நாம் என்ன தாக்கத்தை உருவாக்குகிறோம்.

சமூகத்தில் நாம் என்ன தாக்கத்தை உருவாக்குகிறோம் என்பது எந்தவொரு  கல்வி நிறுவனத்தின் மிகப்பெரிய வெற்றியாகும். இந்தியா ஒரு சர்வ வல்லமையுள்ள நாடாக இருக்க விரும்புகிறது, அது மற்ற நாடுகளை ஆதிக்கம் செலுத்தவோ அல்லது நியாயமற்ற விதிமுறைகளை ஆணையிடவோ விரும்புவதில்லை. இந்தியாவிற்கு விதிமுறைகளை ஆணையிட யாரும் துணிந்து விடக்கூடாது.

2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த நாடு என்ற இலக்கை இந்தியா அடையும். நாம் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக இருக்க விரும்புகிறோம். இன்றைய உலக சூழ்நிலை சவால்களால் நிறைந்துள்ளது. அதிர்ஷ்டம் நமக்கு எல்லா நேரங்களிலும் சாதகமாக இல்லாமல் போகலாம். ஆனால் கடின உழைப்பு அதிர்ஷ்டம் ஒரு முறையாவது நமக்கு சாதகமாக அமையும். அது மிகச் சிறப்பாக இருக்கும். நீங்கள் இலக்கை நிர்ணயித்து, எப்போதும் உங்களுக்கு வசதியான வேகத்தில் இலக்கை நோக்கி நகர வேண்டும்.

யாருடனும் உங்களை ஒருபோதும் ஒப்பிடாதீர்கள். ஒவ்வொருவருக்கும் அவரவர் நன்மை தீமைகள் உள்ளன. கடின உழைப்பு, நேர்மை மற்றும் எந்த வேலையிலும் ஈடுபாடு ஆகியவை ஒரே நாளில் உங்களுக்கு வெற்றியைத் தராமல் போகலாம், ஆனால் அது வேறொரு நாளில் பெரிய வெற்றியைத் தரும். அந்த வெற்றியை கடவுளால் கூட மறுக்க முடியாது. சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேசினார்.

7ம் ஆண்டு நினைவு நாள்

முன்னதாக, துமகூரில் உள்ள சித்தகங்கா மடத்தின் மடாதிபதியாக இருந்த சிவகுமார சுவாமியின் 7 வது ஆண்டு நினைவு தினம் நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், துமகூரு தொகுதி பா.ஜ., எம்.பி.,யும், மத்திய ரயில்வே இணை அமைச்சருமான சோமண்ணா, கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சிவகுமார சுவாமி உருவப்படத்திற்கு, துணை ஜனாதிபதி உள்ளிட்டோர் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். மடத்தில் உள்ள சிவகுமார சுவாமியின் உருவ சிலையை வணங்கினர். மடத்தின் தற்போதைய மடாதிபதி சித்தலிங்க சுவாமி, ராதாகிருஷ்ணனுக்கு, சிவகுமார சுவாமியின் உருவ சிலையை நினைவு பரிசாக வழங்கினார். பின், மடத்தில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்களுடன், துணை ஜனாதிபதி உரையாடினார். முன்னதாக மாணவர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்