தமிழகத்தை கஞ்சா போதையில் தள்ளாட வைத்திருப்பதுதான் திமுகவின் சாதனை ! சீமான்
22 தை 2026 வியாழன் 07:18 | பார்வைகள் : 106
தமிழகத்தை கஞ்சா போதையில் தள்ளாட வைத்திருப்பது தான் 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் சாதனை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: திருவள்ளூர் அருகே ஒண்டிக்குப்பம் பகுதியில் நான்கு பேர் கொண்ட கஞ்சா போதை கும்பல், இருவரை அடித்துக் கொன்ற கொடூர நிகழ்வின் சுவடு மறைவதற்குள், சென்னை வேளச்சேரியில் உணவு வழங்கும் இளைஞரை கஞ்சா போதையில் 3 பேர் கும்பல் அரிவாளால் வெட்டும் காணொளி இதயத்தை உறையச் செய்கிறது. கட்டுக்கடங்காத போதைப்பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் நாள் தோறும் நடைபெறும் வன்முறை வெறியாட்டங்கள் நாம் நாகரீகம் அடைந்த நாட்டில்தான் வாழ்கின்றோமா? என்ற ஐயத்தை ஏற்படுத்தும் அளவிற்கு திமுக ஆட்சியில் தமிழகம் போதை விற்பனையின் உச்சத்தை எட்டியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கிலோ கணக்கில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதும், அதனால் அதிகளவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகின்றனர் என்பதும் மிகுந்த கவலையையும், வேதனையையும் அளிக்கிறது. மதுபானங்களை அரசே விற்பதன் மூலம் தமிழகக் குடும்பங்களைச் சீரழித்தது போதாதென்று, தற்போது போதைப்பொருட்களின் பயன்பாட்டினை கட்டுப்படுத்தத் தவறி, வளரிளம் தலைமுறைகளின் எதிர்காலத்தையே திமுக அரசு அழித்தொழிக்கிறது. போதைப்பொருள் பயன்பாட்டால் கொலை, கொள்ளை, வழிப்பறி, கூட்டுப் பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட கொடுங்குற்ற நிகழ்வுகளும் பெருமளவு அதிகரித்து தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றுமுழுதாகச் சீரழியவும் காரணமாகியுள்ளது.
சாதனை
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு போதைப்பொருள் புழக்கத்தால் நடைபெறும் வன்முறைகளில் இந்தியாவிலயே தமிழகம் முதலிடம் பெறும் அளவிற்கு மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. பல லட்சம் கிலோ போதைப்பொருள் விற்பனை, பல்லாயிரக்கணக்கில் போதைப்பொருள் குற்ற வழக்குகள் என்பதே 5 ஆண்டு கால திமுக அரசின் சாதனையாகும். தமிழகத்தை போதையில் திமுக அரசு தள்ளாட வைத்துள்ளது. அண்டை மாநிலங்களிலிருந்து நாள்தோறும் தமிழகத்திற்குள் கஞ்சா பொட்டலங்கள் மொத்தமாக கடத்தப்படும் நிலையில், அதனைத் தடுக்க திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
கட்டுக்கடங்காத போதைப்பொருள் விற்பனையை தடுக்க முடியாதது அதன் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது. தமிழத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களைப் பயன்படுத்துவோர், கடத்துவோர், பதுக்குவோர், விற்போர் மீது மட்டுமே அவ்வப்போது கண்துடைப்பிற்காக நடவடிக்கை எடுக்கப்படுகிறதே தவிர, போதைப்பொருள் உற்பத்தி முதலாளிகள் மீது தமிழக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால்தான் தமிழகத்தில் இன்றுவரை போதைப்பொருள் பயன்பாட்டினை முழுமையாக ஒழிக்க முடியவில்லை.
நடவடிக்கை
போலீசார் பற்றாக்குறையும் தமிழகத்தில் கஞ்சா விற்பனையை முழுவதுமாகத் தடுக்க முடியாததற்கு மற்றுமொரு முக்கியக் காரணமாகும். ஒவ்வொரு ஊரிலும் அரசே மதுக்கடைகளை திறந்து வைத்து மக்களை குடிக்க வைத்துவிட்டு, போதைப்பொருளை ஒழிப்போம் என்று திராவிட மாடல் அரசு பேசுவது வெட்கக்கேடானது. போதையின் பாதையில் இளைஞர்கள் செல்ல வேண்டாம் என்று காணொளி வெளியிடுவதாலோ, ஆண்டுக்கு ஒரு முறை போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பதாலோ மட்டும் போதைப்பொருள் ஒழிந்துவிடாது என்பதை இனியேனும் உணர்ந்து, போலீசாரை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், சீரழிந்து வரும் தமிழ் இளந்தலைமுறையினரின் எதிர்காலத்தைப் பாதுகாக்க தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை முழுவதுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan