Paristamil Navigation Paristamil advert login

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறோம் - டிடிவி தினகரன் அதிரடி அறிவிப்பு

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறோம் - டிடிவி தினகரன் அதிரடி அறிவிப்பு

21 தை 2026 புதன் 14:55 | பார்வைகள் : 153


தமிழக சட்டசபைக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆளுங்கட்சியான திமுக ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளவும், எதிர்க்கட்சியான அதிமுக ஆட்சியை பிடிக்கவும் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றன. ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மக்கள் நீதி மய்யம் என பல கட்சிகள் வரிசை கட்டி நிற்கின்றன.  

இதுபோக, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துவிட்டது. புதிய வரவான நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், கூட்டணிக்கு பிற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தாலும் முதல்-அமைச்சர் வேட்பாளர் விஜய்தான் என்று கூறிவருகிறது.  

இந்த சூழலில், அதிமுக - பாஜக கூட்டணி கட்சிகளின் முதல் பிரசார பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் 23-ந்தேதி நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பேச இருக்கிறார்கள். எனவே கூட்டணியை இறுதிப்படுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

தற்போது வரை அதிமுக - பாஜக கூட்டணியில் பாமக (அன்புமணி), தமாக, புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி இடம்பெற்றுள்ளது. கூட்டணியில் தேமுதிக, அமமுகவை சேர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.  

இந்த நிலையில் அதிமுக - பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிரடியாக அறிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில் மீண்டும் இணைவதாக தெரிவித்துள்ளார். சென்னயில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன் கூறியதாவது:-  

அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்து 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறோம். தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைக்கும் நோக்கில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறோம். பழைய விஷயங்களை நினைத்துக் கொண்டு கட்சி மற்றும் தமிழ்நாட்டு நலனை பின்னுக்கு தள்ளிவிடக் கூடாது. எங்களுக்குள் நடப்பது பங்காளி சண்டைதான். விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை.  

இன்னா செய்தாரை ஒறுத்தல் என்ற வள்ளுவரின் வாக்குப்படி கூட்டணியை முடிவு செய்துள்ளோம். மக்கள் விரும்பும் நல்லாட்சியை தமிழ்நாட்டில் உருவாக்க தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறோம். தமிழகத்தில் நல்லாட்சி அமைய உறுதுணையாக இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.  

தொடர்ந்து பாஜக மேலிட பொறுப்பாளரும், மத்திய மந்திரியுமான பியூஸ்கோயலை சந்திக்க இருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.  

வர்த்தக‌ விளம்பரங்கள்