கூட்டணியில் காங்கிரசை தக்க வைக்க முயற்சி !
21 தை 2026 புதன் 07:44 | பார்வைகள் : 631
மாற்று அணி குறித்து யோசிக்கும் காங்கிரசை, தொடர்ந்து கூட்டணியில் தக்க வைக்கும் முயற்சியில் தி.மு.க., தலைமை இறங்கியுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுலை, டில்லியில் நாளை தி.மு.க., - எம்.பி., கனிமொழி சந்தித்து, இது தொடர்பாக பேச உள்ளார். கடந்த 17ம் தேதி, தமிழக சட்டசபை தேர்தல் குறித்த காங்கிரஸ் ஆயத்தக் கூட்டம் டில்லியில் நடந்தது. அதில், தமிழக காங்கிரஸ் முன்னணி தலைவர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 41 பேர் பங்கேற்றனர்.
தி.மு.க.,விடம் அதிக தொகுதிகள் கேட்க வேண்டும். ஆட்சியில் பங்கு கிடைக்கவில்லை என்றால், த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும்' என சிலரும், 'தி.மு.க., கூட்ட ணியில் நீடிக்க வேண்டும்' என பலரும் வலியுறுத்தினர்.
இக்கூட்டத்திற்கு பின், ராகுலை தனியாக சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் கூட்டணி விவகாரம் பற்றி பேசியுள்ளார்.
அப்போது, ராகுலிடம் சிதம்பரம் கூறியுள்ளதாவது:
கடந்த 2004ம் ஆண்டில் இருந்து, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி நீடித்து வருகிறது. தங்களின் தாய் சோனியா, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையில் உருவானது தான் இந்த கூட்டணி. தமிழகத்தில் இது வெற்றிக் கூட்டணி.
அதிக இடங்களை கேட்கலாம்
மத்தியில் சில ஆண்டுகள் வெற்றி கிடைக்காமல் இருந்திருக்கலாம்; அது நிரந்தரம் அல்ல. வரும் 2029ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், பிரதமர் பதவியில் நீங்கள் அமர வேண்டுமானால், உ.பி., தமிழகம் ஆகிய மாநிலங்களின் எம்.பி.,க்களின் எண்ணிக்கை முக்கிய பங்கு வகிக்கும்.
"'இண்டி' கூட்டணியிலிருந்து தி.மு.க., விலகினால்,காங்கிரசுக்குத் தான் பின்னடைவு. தி.மு.க.,விடம் அதிக இடங்களை கேட்கலாம். ஆட்சியில் பங்கு என்பதை, தேர்தல் முடிவுக்கு பின் பார்க்கலாம்; அது தான் நியாயமாக இருக்கும்; கூட்டணி தர்மமாகவும் அமையும்.
தற்போது மாற்று கூட்டணி பற்றி யோசித்தால், நாம் அவர்களை ஏமாற்றுவதற்கு சமமாகி விடும். மக்களிடம், காங்கிரஸ் கட்சி மீது இருக்கிற அபிப்ராயமும் மதிப்பும் போய் விடும்.
தி.மு.க.,வுடன் கூட்டணியா? மனம் திறந்த காங்., தலைமை
திட்டமிட்டு குழப்பம்
முதல்வர் ஸ்டாலின் தலைமையில், காங்கிரஸ் சந்திக்கிற தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறோம். மாற்று அணி குறித்து காங்கிரஸ் எம்.பி.,க்கள் பொது வெளியில் பேசுவதும், சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிடுவதும், இண்டி கூட்டணியில் திட்டமிட்டு குழப்பம் ஏற்படுத்துவதாக அமையும்.
தி.மு.க., கூட்டணியில் நீடிக்கிறோம் என்பதை நாம் அறிவித்தாக வேண்டும். இந்த முடிவில் தாமதிக்கக் கூடாது. நாம் தாமதித்தால், மாற்று அணியை காரணம் காட்டி, நாம் பேரம் பேசுவது போல் ஆகி விடும்; அதற்கு, நாம் இடம் அளிக்கக் கூடாது.
சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் நீடிக்க வேண்டும். கட்சியின் எதிர்காலத்தை கருதி, இந்த முடிவை எடுத்தாக வேண்டும். இவ்வாறு சிதம்பரம் கூறியுள்ளதாக தெரிகிறது.
ராகுலிடம் சிதம்பரம் வலியுறுத்திய இந்த தகவல், முதல்வர் ஸ்டாலினுக்கு அன்று இரவே தெரிய வந்தது. சிதம்பரம் பேச்சுக்கு முக்கியத்துவம் தரும் வகையில், தமிழக காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்க, அவர் முன்வந்துள்ளார்.
சென்னை அறிவாலயத்தில் இன்று நடக்கும் மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில், காங்கிரசுக்கு கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகள் ஒதுக்குவது குறித்து, முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். ராகுலை சந்தித்து பேச, கனிமொழியை டில்லி அனுப்ப உள்ளார்.
நாளை மதியம் சந்திப்பு
டில்லியில் நாளை மதியம் ராகுலை சந்தித்து, தி.மு.க., கூட்டணியில் காங்கிரசை தக்க வைப்பது குறித்து கனிமொழி பேச உள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan