ஆதார், ரேஷன் கார்டை பெற மறுத்த கல்லத்திகுளத்து மக்கள் !!
19 தை 2026 திங்கள் 08:59 | பார்வைகள் : 100
மாறாந்தை அருகே கவர்னர் பெயரில் உள்ள நிலத்தை அபகரித்து பட்டா போட்டுக் கொண்டவர்கள் மீது நடவடிக்கை கோரி, கவர்னருக்கு ரேஷன், ஆதார் அட்டைகளை அனுப்பிய கிராம மக்கள், அதை அரசிடம் திரும்ப பெற மறுத்தனர்.
தென்காசி மாவட்டம், மாறாந்தை, கல்லத்திகுளத்தில், 'விசி கிரீன் எனர்ஜி' எனும் சோலார் நிறுவனம், ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டி, சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல்களை நிறுவியுள்ளது. அந்த நிறுவனம் விலைக்கு வாங்கிய நிலத்தோடு சேர்த்து, நீர்நிலைகளையும், ஹரி என்பவர் தமிழக கவர்னர் பெயருக்கு எழுதி கொடுத்த, 1.5 ஏக்கர் நிலத்தையும் அபகரித்துக் கொண்டனர்.
சமூக ஆர்வலர் எஸ்.பி.முத்துராமன் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், சோலார் நிறுவனம் வெட்டிய மரங்களின் எண்ணிக்கைக்கு ஈடாக, 10 மடங்கு மரக்கன்றுகளை அங்கு நட ஐகோர்ட் உத்தரவிட்டது. இருப்பினும், ஆலங்குளம்தாலுகா, வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், சோலார் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி, மூன்று மாதங்களுக்கு முன், கிராமத்தில் உள்ள, 103 குடும்பத்தினர் தங்கள் ஆதார் மற்றும் ரேஷன் கார்டை கவர்னருக்கு அனுப்பினர்.
மூன்று மாதங்களாக இந்த கிராமத்தினர் ரேஷனில் எந்த பொருளும் பெறவில்லை. பொங்கல் பரிசு தொகையும் வாங்கவில்லை. கவர்னர் அலுவலகத்தில் இருந்து, நடவடிக்கை எடுக்கும்படி, தென்காசி மாவட்ட நிர்வாகத்திற்கு அவற்றை அனுப்பினர்.
அபகரித்த நிலத்தை இன்னும் ஒப்படைக்கவில்லை. நீர்நிலைகள், வண்டி பாதைகள் ஆக்கிரமிப்பும் இன்னும் அகற்றப்படவில்லை.
ஆனால், ஆலங்குளம் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து 103 குடும்பத்தின் ரேஷன் மற்றும் ஆதார் அட்டைகளை, பதிவு தபாலில் அந்தந்த குடும்பத்தினருக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
மரங்கள் வெட்டப்பட்டதற்கு ஈடாக, 10 மடங்கு மரக்கன்றுகள் நட ஐகோர்ட் உத்தரவிட்டதால், இந்த பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது எனக்கூறி, கடிதமும் எழுதியுள்ளனர். நேற்று வந்த இத்தபால்களை கிராமத்தினர் பெற மறுத்து விட்டனர்.
எங்களின் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை; அது நிறைவேறும் வரை அவற்றை பெற மாட்டோம் என, ரேஷன் அட்டை, ஆதார் கார்டு ஆகியவற்றை தாலுகா அலுவலகத்திற்கு திரும்ப அனுப்பினர். இதே போக்கை அரசு கடைபிடித்தால், சட்டசபை தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan