மஹாராஷ்டிராவின் 2,869 வார்டுகளில் 1,425ஐ கைப்பற்றியது பா.ஜ.
18 தை 2026 ஞாயிறு 09:20 | பார்வைகள் : 169
மஹாராஷ்டிராவில், 29 மாநகராட்சிகளில் மொத்தமுள்ள, 2,869 வார்டுகளுக்கு நடந்த உள்ளாட்சி தேர்தலில், 1,425 வார்டுகளை கைப்பற்றி பா.ஜ., அமோக வெற்றி பெற்றுள்ளது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்., அடங்கிய, 'மஹாயுதி' கூட்டணி ஆட்சி நடக்கிறது.
நீண்ட கால பகை சமீபத்தில், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மாநகராட்சிக்கான தேர்தல் கடந்த 15ம் தேதி நடந்தது.
மும்பை, புனே, சத்ரபதி சம்பாஜிநகர், நவி மும்பை, வசைவிரார், கல்யாண் டோம்பிவிலி, கோலாப்பூர், நாக்பூர், சோலாபூர், அமராவதி, அகோலா, நாசிக், பிம்ப்ரி சின்ச்வாட், உல்லாஸ்நகர், தானே, சந்திரபூர், பர்பானி, மிராபயந்தர், நன்டெட் வாகலா, பன்வெல், பிவாண்டி நிஜாம்பூர், லத்துார், மாலேகான், சங்லி மிராஜ்குப்வாட், ஜல்காவ், அஹில்யாநகர், துலே, ஜல்னா மற்றும் இச்சல்கரன்ஜி ஆகிய 29 மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.
மும்பை மாநகராட்சியை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் உத்தவ் சிவசேனாவின் உத்தவ் தாக்கரேவும், மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் ராஜ் தாக்கரேவும் நீண்ட கால பகையை மறந்து ஒன்றாக கைகோர்த்து போட்டியிட்டனர்.
துணை முதல்வர் அஜித் பவார், புனேவை மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கோட்டையாக மாற்றும் வகையில், சரத்பவாருடன் இணைந்து களம் கண்டார். துணை முதல்வரான ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவுடன் கைகோர்த்து பா.ஜ., களம் கண்டது. தேர்தல் முடிந்து ஓட்டுகள் எண்ணப்பட்டு நேற்று முன்தினம் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
தன் வசம் மொத்தம் 29 மாநகராட்சிகளில் உள்ள 2,869 இடங்களில், 1,425 இடங்களில் பா.ஜ., வெற்றி பெற்றது. இதன் மூலம் தாக்கரே மற்றும் பவார்களின் மும்பை மற்றும் புனே கோட்டையை பா.ஜ., தன் வசமாக்கியுள்ளது.
ஆசியாவிலேயே பணக்கார மாநகராட்சியான மும்பையில் உள்ள 227 இடங்களில் பா.ஜ., மட்டும் 89 இடங்களில் வெற்றி பெற்று, உத்தவ் சிவசேனாவின் 28 ஆண்டுகால ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
பா.ஜ., கூட்டணியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, 29 இடங்களில் வெற்றி பெற்றது. உத்தவ் சிவசேனா 65, மஹாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா 6 இடங்களை வென்றுள்ளன.
வன்சித் பகுஜன் அகாடி கூட்டணி அமைத்த காங்கிரஸ் 24, ஏ.ஐ.எம்.ஐ.எம்., 8, தேசியவாத காங்கிரஸ் 3, சமாஜ்வாதி 2 மற்றும் சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் ஒரு இடத்தையும் கைப்பற்றின.
நவி மும்பை மாநகராட்சியிலும் 69 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக பா.ஜ., உருவெடுத்துள்ளது.
அதே போல் கல்யாண் டோம்பிவிலி 50, மிராபயந்தர் 78, நாசிக் 72, பன்வெல் 55, புனே 119, பிம்ப்ரி சின்ச்வாட் 84, சோலாபூர் 87, சத்ரபதி சம்பாஜிநகர் 57, நான்டெட் 45 மற்றும் நாக்பூரில் 102 இடங்களையும் பா.ஜ., வென்றுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan