திமுகவா? தவெகவா? யாருடன் கூட்டணி: காங்கிரஸ் நிர்வாகிகள் ராகுல் காந்தியுடன் இன்று சந்திப்பு
17 தை 2026 சனி 06:47 | பார்வைகள் : 182
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியின் பிரதான கட்சியாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், நடிகர் விஜய் தவெக என்னும் புதிய கட்சியை தொடங்கியது முதல் காங்கிரஸ் கட்சிக்குள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் இடங்களில் போட்டி என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதற்கிடையே ராகுல்காந்தியின் நெருங்கிய வட்டாரத்தில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தொழில் வல்லுனர் மற்றும் தரவு பகுப்பாய்வு துறை தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி அவ்வப்போது நடிகர் விஜய்யை சந்தித்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருச்சி வேலுசாமி தலைமையில் ஜனநாயகன் பொங்கல் விழா கொண்டாடி திமுக கூட்டணியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு, அதிக இடங்களில் போட்டி கோரிக்கையை மேலும் வலுப்படுத்தி உள்ளார்.
பொதுவாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் மேல்மட்ட தலைவர்களை தவிர இரண்டாம் கட்ட தலைவர்கள் முதல் கடைக்கோடி தொண்டர்கள் வரை பெரும்பாலானோர் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இருப்பினும் கட்சி மேலிடம் இதுவரை எந்தவித பதிலும் அளிக்காமல் மவுனம் காத்து வந்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்த ஆயத்தக் கூட்டம் டெல்லியில் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணியா? தவெகவுடன் கூட்டணியா? என்பதற்கான முற்றுப்புள்ளி ஏற்படும் என்று தெரிகிறது.
இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் கோபண்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அகில இந்திய காங்கிரஸ் தலைமையகமான டெல்லி, இந்திரா பவனில் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்த ஆயத்தக் கூட்டம் 17-ந்தேதி (இன்று) சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், தமிழகத்தை சேர்ந்த அகில இந்திய காங்கிரஸ் துணை அமைப்புகளின் தலைவர்கள், முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல்காந்தியை சந்திக்க உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் இந்தியா கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் திமுகவுடன் கூட்டணி வைக்கப் போகிறதா? நடிகர் விஜய்யின் ரசிகர் பட்டாளங்களை நமது அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியை வளர்க்கும் வகையில் தவெகவுடன் கூட்டணி அமைக்கப் போகிறதா? என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும் என்று நம்பப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan