Paristamil Navigation Paristamil advert login

லயோலா கல்லுாரியின் சிறுபான்மை அங்கீகாரத்தை ரத்து செய்ய கவர்னருக்கு கடிதம்!

லயோலா கல்லுாரியின் சிறுபான்மை அங்கீகாரத்தை ரத்து செய்ய கவர்னருக்கு கடிதம்!

17 தை 2026 சனி 05:44 | பார்வைகள் : 179


லயோலா கல்லுாரியில் தத்துவவியல் படிப்புகள், பல்கலை விதிகளுக்கு மாறாக நடந்துள்ளதாகவும், அதனால் பல்வேறு மோசடிகள் அரங்கேறியதாகவும் குற்றம் சாட்டியுள்ள சட்ட உரிமைகள் பாதுகாப்பு மன்றம், 'கல்லுாரியின் சிறுபான்மை கல்வி நிறுவன அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்' என, கவர்னர் ரவிக்கு, கடிதம் எழுதி உள்ளது.

தமிழகத்தில் நுாற்றாண்டு பழமையான சென்னை பல்கலையின்கீழ், லயோலா கல்லுாரி இயங்கி வருகிறது. இக்கல்லுாரியில், முதுநிலை தத்துவவியல் படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.

கல்லுாரி வளாகத்துக்குள் கற்பிக்க வேண்டிய முதுநிலை தத்துவவியல் படிப்புகள், பல்கலை விதிகளுக்கு மாறாக, சென்னை அடையாறில் உள்ள பாதிரியார்கள் பயிற்சி மையமான, 'சத்யா' நிலையத்தில் நடத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக, சட்ட உரிமைகள் பாதுகாப்பு மன்றம் என்ற அமைப்பு, தேசிய மனித உரிமைகள் ஆணையம், சென்னை பல்கலை மற்றும் தமிழக கவர்னரிடம் புகார் அளித்தது.

இதுகுறித்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரித்து, கல்லுாரியின் மீது நடவடிக்கை எடுக்க, பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி.,க்கு பரிந்துரைத்தது. அதேபோல், சென்னை பல்கலை பேராசிரியர்கள் தலைமையிலான குழுவும் ஆய்வு செய்தது.

அந்த ஆய்வில், லயோலா கல்லுாரியில் குறிப்பிட்ட துறைக்கு தனி வகுப்பறை இல்லை; ஆசிரியர் அறை இல்லை; துறை நுாலகம் கிடையாது. தத்துவவியல் துறை இருப்பதற்கான அடையாளமே அங்கு இல்லை என கண்டறியப்பட்டது.

விசாரணை குழு, லயோலா கல்லுாரி மீது நடவடிக்கை எடுக்க பல்கலைக்கு பரிந்துரை செய்தது. அதை தொடர்ந்து, லயோலா கல்லுாரியில் எம்.ஏ., தத்துவவியல் படிப்புகளை மூன்று ஆண்டுகள் நடத்த, சென்னை பல்கலை தடை விதித்தது.

இந்நிலையில், 'லயோலா கல்லுாரி மீது, சென்னை பல்கலை மேற்கொண்ட நடவடிக்கை போதாது; கல்லுாரியின் சிறுபான்மை அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும்' என, கவர்னர் ரவிக்கு, சட்ட உரிமைகள் பாதுகாப்பு மன்றம் கடிதம் எழுதி உள்ளது.

முறைகேடு

கடிதத்தில் கூறியிருப்பதாவது: லயோலா கல்லுாரியில், எம்.ஏ., தத்துவவியல் படிப்பு தொடர்பாக, சென்னை பல்கலை நடத்திய ஆய்வில், முறைகேடுகள் நடத்திருப்பது நிரூபிக்கப்பட்டது. இது, யு.ஜி.சி., மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது.

கல்லுாரி வளாகத்துக்கு மாற்றாக, சத்யா நிலையத்தில் பாடங்கள் நடத்தப்பட்டதால், கிறிஸ்துவர்கள் தவிர மற்ற மதத்தினர் தத்துவவியல் பாடம் படிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது;  இடஒதுக்கீடும் பின்பற்றப்படவில்லை.

சென்னை பல்கலையும், 1998ம் ஆண்டு முதல் தன்னாட்சி அங்கீகாரம் பெற்று இயங்கும் லயோலா கல்லுாரியில், எம்.ஏ., தத்துவவியல் படிப்பு எப்படி செயல்படுத்தப்படுகிறது என முறையாக ஆய்வு செய்யவில்லை.

இந்த விசாரணைக்குப்பின், கடந்த டிசம்பர் மாதம், சென்னை பல்கலையில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில், லயோலா கல்லுாரி எம்.ஏ., தத்துவவியல் பாடத்தை மூன்று ஆண்டுகள் நடத்த தடை விதித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நடவடிக்கை போதுமானதல்ல. விதிகளை மீறிய கல்லுாரிக்கு, அபராதங்கள் ஏதும் விதிக்கப்படவில்லை. நடவடிக்கைகளில் இருந்து லயோலா கல்லுாரியை பாதுகாக்க, நிர்வாக மற்றும் அரசியல் ஆதரவுகள் கிடைக்கிறதோ என தோன்றுகிறது.

லயோலா கல்லுாரி, சத்யா நிலையத்துடன் இணைந்து, எம்.ஏ., தத்துவவியல் படிப்பை வழங்கி உள்ளது. அதில், மாணவர் விசாவில் வந்த வங்க தேசத்தைச் சேர்ந்த பாதிரியார்கள் சேர்ந்துள்ளனர்.

மாணவர் விசாவில் நிதியுதவி பெற்றுள்ளனர். ஆனால் அவை, மிஷினரி நடவடிக்கைகளுக்கு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இது, விசா மோசடியை குறிக்கிறது.

சட்டவிரோதம்

அதேபோல், வெளிநாடுகளில் இருந்து எப்.சி.ஆர்.ஏ., எனும் நிதியுதவி வசூலிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினருக்கு மோசடி முறையில் கல்வி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. இது, சட்டவிரோதம். எனவே, லயோலா கல்லுாரி விதிமீறல்கள் தொடர்பாக, சென்னை பல்கலை உரிய விசாரணை நடத்த வேண்டும்.

1998ம் ஆண்டு முதல் லயோலா கல்லுாரி எம்.ஏ., தத்துவவியல் பட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அந்த கல்லுாரி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட தன்னாட்சி அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.மேலும், மத்திய அரசின் நிதியையும் நிறுத்த வேண்டும். கல்லுாரியை யு.ஜி.சி., கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும். இந்த விவகாரத்தில், உயர்கல்வித்துறையின் அரசியலமைப்பு கட்டமைப்பை காக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்