முன்னணி இயக்குனர்கள் தெலுங்கு சினிமாவிற்கு போக இதுதான் காரணமா?
16 தை 2026 வெள்ளி 12:59 | பார்வைகள் : 161
தமிழ் சினிமாவில் இன்னும் பான் இந்தியா வசூலில் சாதனை புரியும் அளவிற்கு எந்த ஒரு படமும் வரவில்லை. கடந்த சில வருடங்களாக பான் இந்தியா, பான் இந்தியா என மற்ற மொழி சினிமா ரசிகர்கள் பேசி, தமிழ் சினிமாவைக் கொஞ்சம் கிண்டலடித்தும் வருகிறார்கள்.
தெலுங்கு சினிமாவில் சில படங்களும், கன்னட சினிமாவில் சில படங்களும் தமிழ் சினிமா புரியாத வசூல் சாதனையைப் புரிந்ததே அதற்குக் காரணம். கடந்த வருடத்தில் அதிக வசூலைக் குவித்த தமிழ்ப் படமாக ரஜினிகாந்த் நடித்த 'கூலி' படம்தான் இருந்தது. அதைவிடவும் கன்னடப் படமான 'காந்தாரா சாப்டர் 1' அதிக வசூலைக் குவித்தது.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களாக முன்னேறி வந்த சில இளம் இயக்குனர்கள் தமிழ் சினிமாவிலிருந்து தெலுங்கிற்குத் தாவி வருகிறார்கள்.
தமிழில் 2019ல் வெளிவந்த விஜய் நடித்த 'பிகில்' படத்திற்குப் பிறகு கடந்த 6 வருடங்களாக தமிழில் எந்தப் படத்தையும் இயக்கவில்லை அட்லி. 2023ல் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்த ஷாரூக்கான் நடித்த 'ஜவான்' ஹிந்திப் படத்தை இயக்கினார். அடுத்து அப்படியே தெலுங்குப் பக்கம் தாவி, தற்போது அல்லு அர்ஜுனின் 22வது படத்தை இயக்கி வருகிறார்.
அவரைப் போல அடுத்து தெலுங்குப் பக்கம் தாவி அல்லு அர்ஜுனின் 23வது படத்தை இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ். இப்படத்திற்கான பேச்சுவார்த்தைகள் துவங்கிய குறுகிய காலகட்டத்திலேயே படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வந்துவிட்டது.
அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர் 2' படத்தை முடித்த பின், தனது அடுத்த படமாக ஜுனியர் என்டிஆர் நடிக்க உள்ள படத்தை நெல்சன் இயக்கப் போகிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
இந்த மூன்று படங்களுமே பான் இந்தியா படங்களாக இருப்பதால் அந்தப் படங்களின் இயக்குனர்களுக்கு அவர்கள் கேட்கும் சம்பளத்தைக் கொடுக்கத் தயாரிப்பு நிறுவனங்கள் தயாராக இருக்கிறதாம். 75 முதல் 100 கோடி வரையில் சம்பளம் என்று கிசுகிசுக்கிறார்கள்.
தமிழில் உள்ள தற்போதைய நடிகர்களை வைத்து இப்படியான கதைகளை இயக்கினால் பெரும் வசூலும் கிடைக்காது, தங்களுக்கு பெரும் சம்பளமும் கிடைக்காது என இந்த இயக்குனர்கள் இப்படியான முடிவை எடுப்பதாகச் சொல்கிறார்கள்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan