ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ணம்
14 தை 2026 புதன் 14:03 | பார்வைகள் : 129
19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ணப் போட்டிக்கான சி குழுவில் முன்னாள் சம்பியன்களான இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் ஸ்கொட்லாந்து, ஸிம்பாப்வே ஆகியன இடம்பெறுகின்றன.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த வருட இறுதியில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் சம்பியனான பாகிஸ்தான், மிகுந்த நம்பிக்கையுடன் உலகக் கிண்ணப் போட்டிகளை எதிர்கொள்ளவுள்ளது.
2024இலும் 2006இலும் தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் 19 வயதுக்குட்பட்ட உலக சம்பியனான பாகிஸ்தான் 3ஆவது தடவையாக சம்பியானாகும் குறிக்கோளுடன் இந்த உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடவுள்ளது.
அதேவேளை, 38 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற இரண்டாவது 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண அத்தியாயத்தில் சம்பியனான இங்கிலாந்து, இரண்டாவது சம்பியன் பட்டத்துக்கு குறிவைத்து விளையாடவுள்ளது.
அவுஸ்திரேலியாவில் 1988இல் நடைபெற்ற அங்குரார்ப்பண உலகக் கிண்ண அத்தியாத்தைத் தவிர்ந்த மற்றைய 14 அத்தியாயங்களிலும் ஸிம்பாப்வே பங்குபற்றியதுடன் ஸ்கொட்லாந்து 11ஆவது தடவையாக களம் இறங்குகிறது.
19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண வரலாற்றில் ஐந்து நாடுகளே இதுவரை சம்பியன் பட்டத்தை சுவிகரித்துள்ளன. அவற்றில் ஒன்றான இங்கிலாந்து, 1998இல் உவைஸ் ஷா தலைமையில் சம்பியன் பட்டத்தை வென்றிருந்தது.
சம்பியனான அந்த அணியில் தற்போதைய இங்கிலாந்து பணிப்பாளர்நாயகம் ரொப் கீ இடம்பெறுவதுடன் க்ரேம் ஸ்வோனும் விளையாடி இருந்தார்.
நான்கு வருடங்களுக்கு முன்னர் அன்டிகுவாவில் 2022இல் நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் இறுதிப் போட்டிவரை இங்கிலாந்து முன்னேறி இருந்தது. ஆனால், இந்தியாவிடம் தோல்வி அடைந்து உப சம்பியன் பட்டத்துடன் திருப்தி அடைந்தது.
இங்கிலாந்தில் நடத்தப்படும் கவுன்டி கிரிக்கெட் போட்டியில் விளையாடும் பல வீரர்கள் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண குழாத்தில் இடம்பெறுகின்றனர்.
அணித் தலைவர் தோமஸ் ரீவ் (சமர்செட்), பர்ஹான் அஹ்மத் (நொட்டிங்ஹாம்ஷயர் சகலதுறை வீரர்) ஆகிய இருவரும் இங்கிலாந்து அணியில் பிரதான வீரர்களாக இடம்பெறுகின்றனர்.
கவுன்டி கிரிக்கெட் சம்பியன்ஷிப்பில் 8 போட்டிகளில் 13 விக்கெட்களைக் கைப்பற்றிய பர்ஹான் அஹ்மத், தனது அணி சம்பியனாவதில் பெரும் பங்காற்றி இருந்தார்.
அவர்கள் இருவரைவிட ஜேம்ஸ் மின்டோ (டேர்ஹாம்), ஈசாக் மொஹம்மத் (வூஸ்டர்ஷயர்) ஆகியோரும் கவுன்டி கிரிக்கெட் அனுபவத்துடன் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
எவ்வாறாயினும் அண்மையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் நடைபெற்ற 7 போட்டிகள் கொண்ட இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 - 5 என்ற ஆட்டக் கணக்கில் இங்கிலாந்து தோல்வி அடைந்திருந்தது.
இது இங்கிலாந்து அணிக்கு நெருக்கடியைக் கொடுத்திருந்தாலும் இளையோர் உலகக் கிண்ணத்தில் சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் பங்குபற்றவுள்ளது.
19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவை 191 ஓட்டங்களால் வெற்றிகொண்டு ஆசிய சம்பியனான சூட்டோடு பாகிஸ்தான் இந்த உலகக் கிண்ணத்தில் பங்குபற்றவுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் சமீர் மின்ஹாஸ் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 172 ஓட்டங்களைக் குவித்ததுடன் அவர் மொத்தமாக 471 ஓட்டங்களைப் பெற்றார்.
இளையோர் உலகக் கிண்ண கிரிக்கெட்டில் ஐந்து தடவைகள் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் விளையாடியுள்ளதுடன் 2004இலும் 2006இலும் சம்பியன் பட்டத்தை சூடியிருந்தது.
2006இல் தலைவராக விளையாடிய சப்ராஸ் அஹ்மத், 2017இல் அணித் தலைவராக ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத்தில் பாகிஸ்தானை சம்பியன் ஸ்தானத்திற்கு உயர்த்தி இருந்தார்.
2014க்குப் பின்னர் பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறாத போதிலும் கடந்த 4 அத்தியாயங்களில் அரை இறுதிகளில் விளையாடி இருந்தது.
தமது சொந்த மண்ணில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐரோப்பிய தகுதிகாண் சுற்றில் வெற்றிபெற்றதன் மூலம் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்தில் பங்குபற்ற ஸ்கொட்லாந்து தகுதிபெற்றது.
அந்த சுற்றுப் போட்டியில் விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றியீட்டிய ஸ்கொட்லாந்து, இறுதிப் போட்டியில் நெதர்லாந்தை 20 ஓட்டங்களால் வெற்றிகொண்டு ஐரோப்பிய தகுதிகாண் சம்பியன் என்ற அந்தஸ்துடன் உலகக் கிண்ணத்தில் பங்குபற்றுகின்றது.
கடைசி எட்டு உலகக் கிண்ண அத்தியாயங்களில் ஏழில் விளையாடியுள்ள ஸ்கொட்லாந்து, இதுவரை குழுநிலை போட்டிகளில் வெற்றியை சுவைத்ததில்லை.
எனினும், இந்த வருடம் ஸ்கொட்லாந்து தலைகீழ் முடிவுகளை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஸ்கொட்லாந்து அணிக்கு தோமஸ் நைட் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்கொட்லாந்து தனது ஆரம்பப் போட்டியில் ஸிம்பாப்வேயை ஹராரேயில் எதிர்த்தாடும்.
சொந்த மண்ணில் விளையாடும் ஸிம்பாப்வே அணியினர் தமது நாட்டின் சூழ்நிலைகளை நன்கு அறிந்தவர்களாக திறமையாக விளையாடி அடுத்து சுற்றுக்கு முன்னேற முயற்சிப்பர் என நம்பப்படுகின்றது.
இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளில் ஒன்றை ஸிம்பாப்வே வெற்றிகொண்டால் அதன் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
ஆனால், அது சாத்தியப்படும் என எதிர்பார்க்க முடியாது.
முன்னாள் வீரர் எல்டன் சிக்கும்புரா பயிற்றுவிக்கும் ஸிம்பாப்வே அணிக்கு சிம்பராஷே மட்ஸெங்கெரே தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1999 முதல் 2010 வரை ஸிம்பாப்வே அணியில் விளையாடிய அண்டி ப்ளிக்நோட்டின் புதல்வர்களான கியான், மைக்கல் ஆகிய இரட்டையர்கள் இளையோர் அணியில் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும்.
அண்மையில் இளையோர் மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தென் ஆபிரிக்காவுடனும் பங்களாதேஷுடனும் விளையாடிய ஸிம்பாப்வேயினால் ஒரு வெற்றியையும் பெற முடியாமல் போனது.
ஆனால், வேகப்பந்துவீச்சாளர் ஷெல்டன் மஸவிட்டேரெரா 25.00 என்ற சராசரியுடன் 11 விக்கெட்களைக் கைப்பற்றி தனது சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தி இருந்தார்.
போட்டி விபரங்கள்
ஜனவரி 15: ஸிம்பாப்வே எதிர் ஸ்கொட்லாந்து
ஜனவரி 16: இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான்
ஜனவரி 18: ஸிம்பாப்வே எதிர் இங்கிலாந்து
ஜனவரி 19: பாகிஸ்தான் எதிர் ஸ்கொட்லாந்து
ஜனவரி 21: இங்கிலாந்து எதிர் ஸ்கொட்லாந்து
ஜனவரி 22: ஸிம்பாப்வே எதிர் பாகிஸ்தான்
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan