Paristamil Navigation Paristamil advert login

தாய்லாந்தில் ரயில் மீது பாரம்தூக்கி விழுந்து விபத்து - பலர் பலி

தாய்லாந்தில் ரயில் மீது  பாரம்தூக்கி விழுந்து விபத்து - பலர் பலி

14 தை 2026 புதன் 08:34 | பார்வைகள் : 230


தாய்லாந்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் (பாரம்தூக்கி) ஒன்று ரயில் மீது விழுந்ததில் பயங்கர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணமான நக்கோன் ரட்சசிமா பகுதியில் உள்ள சிகியோ மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

14.01.2026 காலை 9:05 மணியளவில், பேங்கொக் நகரில் இருந்து உபோன் ரட்சதானி மாகாணத்தை நோக்கிப் பயணித்த பயணிகள் ரயில் மீது, அதிவேக ரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இராட்சத கிரேன் ஒன்று சரிந்து விழுந்தது.

விபத்தில் 22 பேர் உயிரிழந்ததுடன் , இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.

அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேன் விழுந்த வேகத்தில் ரயில் தடம் புரண்டதுடன், பெட்டிகள் நசுங்கித் தீப்பிடித்தன. இதனால் பயணிகள் உள்ளேயே சிக்கிக்கொண்டனர்.

மீட்புப் படையினர் தீயை அணைத்து, இடிபாடுகளை வெட்டி எடுத்துப் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சீனாவின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் அதிவேக ரயில் திட்டத்திற்கான கட்டுமானப் பணியின் போதே இந்தத் தவறு நிகழ்ந்துள்ளது.
ரயில் தண்டவாளத்திற்கு மேலே அமைக்கப்பட்டிருந்த கட்டுமானத் தளத்திலிருந்து கிரேன் சரிந்து, கீழே வேகமாகச் சென்றுகொண்டிருந்த ரயில் மீது விழுந்துள்ளது.

தற்போது மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதுடன், விபத்துக்கான காரணம் குறித்து தாய்லாந்து போக்குவரத்து அமைச்சகம் விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்