Paristamil Navigation Paristamil advert login

கூகுளுடன் கைகோர்த்தது ஆப்பிள்: தொழில்நுட்ப உலகில் புதிய திருப்பம்

கூகுளுடன் கைகோர்த்தது ஆப்பிள்: தொழில்நுட்ப உலகில் புதிய திருப்பம்

13 தை 2026 செவ்வாய் 16:33 | பார்வைகள் : 197


செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் நிலவும் கடும் போட்டியைச் சமாளிக்க, ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது நீண்டகாலப் போட்டியாளரான கூகுளுடன் (Google) ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. 

அதன்படி, ஆப்பிளின் 'சிறி' (Siri) குரல் உதவிச் செயலி மற்றும் எதிர்கால 'ஆப்பிள் இன்டலிஜென்ஸ்' (Apple Intelligence) அம்சங்கள் கூகுளின் ஜெமினி (Gemini) தொழில்நுட்பம் மற்றும் கிளவுட் வசதியைப் பயன்படுத்தி இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மெகா கூட்டணிக்காக ஆப்பிள் நிறுவனம் கூகுளுக்கு ஆண்டுக்கு சுமார் 1 பில்லியன் டொலர் வரை செலுத்தக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேம்படுத்தப்பட்ட சிறி செயலி, 2026 ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் வெளியாகவுள்ள iOS 26.4 மென்பொருள் பதிப்பில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூகுளின் தொழில்நுட்ப உதவியுடன் சிறி இனி பயனர் சூழலை (Context) மிகச் சிறப்பாகப் புரிந்துகொள்வதுடன், செயலிகளுக்கு இடையிலான பணிகளை (In-app actions) எளிதாகச் செய்யும் திறன் பெறும்.

ஆப்பிள் தனது சொந்த AI மாதிரிகளை விட வலிமையான கூகுளின் 1.2 ட்ரில்லியன் அளவுருக்கள் (1.2 trillion parameters) கொண்ட மொடலைப் பயன்படுத்த முடிவெடுத்துள்ளது. இருப்பினும், பயனர்களின் தரவுப் பாதுகாப்பு (Privacy) மற்றும் தனியுரிமையை உறுதி செய்ய, இந்த AI அம்சங்கள் ஆப்பிளின் சொந்த 'பிரைவேட் கிளவுட் கம்ப்யூட்' (Private Cloud Compute) கட்டமைப்பில் மட்டுமே இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கூகுளின் தாய் நிறுவனமான அல்பபெட்டின் (Alphabet) சந்தை மதிப்பு முதல் முறையாக 4 ட்ரில்லியன் டொலரைக் கடந்தது.
எக்ஸ் (X) மற்றும் xAI நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், இக்கூட்டணியைக் கடுமையாக விமர்சித்துள்ளார். கூகுள் ஏற்கனவே அண்ட்ரோய்ட் மற்றும் குரோம் மூலம் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், இது "அதிகாரக் குவிப்பு" (Unreasonable concentration of power) என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூட்டணியானது ஓபன்ஏஐ (OpenAI) மற்றும் மைக்ரோசொப்ட் போன்ற நிறுவனங்களுக்குப் பெரிய சவாலாக அமையும் எனத் தொழில்நுட்ப நிபுணர்கள் கருதுகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்