Paristamil Navigation Paristamil advert login

சட்டவிரோத கட்டுமானங்களுக்கு இனி இடமில்லை - இலங்கை ஜனாதிபதியின் அதிரடி அறிவித்தல்

சட்டவிரோத கட்டுமானங்களுக்கு இனி இடமில்லை - இலங்கை ஜனாதிபதியின் அதிரடி அறிவித்தல்

8 மார்கழி 2025 திங்கள் 11:03 | பார்வைகள் : 192


எதிர்காலத்தில் அனுமதியற்ற கட்டுமானங்களுக்கு இடமளிக்கப்படாது என்றும், அதற்கான சட்டங்கள் வலுப்படுத்தப்படும் என்றும் வலியுறுத்திய ஜனாதிபதி, இதனை செய்யத் தவறினால் நாடு மிகப்பெரிய பேரழிவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.

உருவாக்கப்பட இருக்கும் நாட்டை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி செயலணியின் கீழ் சட்டம் தொடர்பான கொள்கைகளை வகுப்பதற்காக தனிப் பிரிவு நிறுவ எதிர்பார்ப்பதாகவும் அதன் கீழ் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகள் காண முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

குருநாகல் மாவட்ட செயலகத்தில் நேற்று (07) நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

குருநாகல் மாவட்டத்தில் சேதமடைந்த அனைத்து மாகாண வீதிகள் மற்றும் பிரதேச சபை வீதிகளையும் அடுத்த 02 வாரங்களுக்குள் முழுமையாக மறுசீரமைத்து பொதுமக்களின் போக்குவரத்துக்கு திறக்குமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.

தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதியை இதற்காகப் பயன்படுத்துமாறும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யக் கூடிய பாதைகள் குறித்த தகவல்களையும் தேவையான நிதியையும் அறிவிக்குமாறும், 2026 ஆம் ஆண்டுக்கு அந்த நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அனர்த்தம் காரணமாக, மாவட்டத்தில் A மற்றும் B தர 1,181 மாகாண வீதிகள் சேதமடைந்துள்ளன. அதே சமயம் 35 பாலங்கள், 162 மதகுகள் என்பன சேதமடைந்துள்ளன.

அவற்றின் விரைவான மறுசீரமைப்பு குறித்து இதன் போது முக்கியமாக ஆராயப்பட்டது, அனர்த்தம் காரணமாக மாவட்டத்தில் வீழ்ச்சியடைந்த மின்சாரம், நீர் வழங்கல் மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உள்கட்டமைப்பு வசதிகளை நிறுவுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தனித்தனியாக விசாரித்த ஜனாதிபதி, இறுதி நுகர்வோர் வரை அந்த சேவைகளை வழங்குவது சேவை வழங்குநர்களின் பொறுப்பு என்றும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் சிறந்த ஒருங்கிணைப்புடன் செயல்படுவதன் மூலம் தற்போதுள்ள தடைகளை நீக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

குருநாகல் மாவட்டத்தில் 12,729 ஹெக்டெயார் நெல் வயல்கள் அனர்த்தத்தினால் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், அவற்றில் 7,215 ஹெக்டெயார் நெல் வயல்கள் மீண்டும் பயிரிடக்கூடிய மட்டத்தில் உள்ளதாகவும், 5,514 ஹெக்டெயார் பயிர்ச்செய்கை செய்ய முடியாதுள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

நீர் விநியோகம் இல்லாததால் பயிற்செய்கை மேற்கொள்ள முடியாவிட்டால் தற்காலிக நீர் விநியோகத்தை வழங்குமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபைக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார். பயிரிட முடியாத நெல் வயல்களின் அளவை முடிந்தளவு குறைத்து, அந்த வயல்களில் பயிற்செய்கை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார். விவசாயிகளுக்கு விதை நெல் மற்றும் உரங்களை வழங்கும் திட்டம் குறித்தும் அவர் ஆராய்ந்தார்.

சோளம், காய்கறிகள் மற்றும் மேலதிக பயிற்செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் முறை குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

கிணறுகளை சுத்திகரிக்கும் பிரதான பொறுப்பு பிரததேச சபைகளுக்கு வழங்கப்படுவதாகவும், முப்படைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பைப் பெற்று நடவடிக்கைகளை விரைவாக நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி பிரதேச சபைத் தலைவர்களிடம் தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள கால்நடை பண்ணைகள் குறித்த துல்லியமான தரவுகளைப் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தையும், தற்போதுள்ள சட்டங்கள் அதற்கு போதுமானதாக இல்லாவிட்டால், அந்தச் சட்டங்களை வகுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மேலும், கால்நடை பண்ணைகள் முறையாகப் பதிவு செய்யப்படாததால் இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் சிக்கல்கள் எழுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, நாடு முழுவதும் உள்ள கால்நடை பண்ணைகள் குறித்த தரவுகளை மீளாய்வு செய்து, இழப்பீட்டுத் தொகைகள் குறித்து விரைவில் கொள்கை ரீதியான முடிவெடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

மேலும், நன்னீர் மீன்பிடித் தொழிலை மீளமைப்பது, சுகாதார சேவை சார்ந்த தேவைகள் மற்றும் பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

மக்களை மீள்குடியேற்றுவதற்கான காணிகளை அடையாளம் காண்பது மற்றும் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது, மேலும் இழப்பீடு வழங்குவதிலும் மக்களை மீள்குடியேற்றுவதிலும் பிரதேச செயலாளர்கள் முழுமையாக தலையிட வேண்டும் என்று ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

இதேவேளை, வீடுகளை இழந்த மக்களுக்காக தமது விகாரைக்குச் சொந்தமான 20 ஏக்கர் நிலத்தை வழங்க மெத்தெகெட்டிய சங்கமு ரஜமஹா விகாரையின் விகாராதிபதியும், உதம்மிட வித்தியாலய ஆசிரியருமான வணக்கத்திற்குரிய அளுத்கம மங்கள தேரர், நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கான ஆவணங்களும் இதன் போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்