Paristamil Navigation Paristamil advert login

பாலையாவின் ருத்ரதாண்டவம் எப்போது?

பாலையாவின் ருத்ரதாண்டவம் எப்போது?

6 மார்கழி 2025 சனி 15:25 | பார்வைகள் : 174


தெலுங்கு சினிமாவில் மாஸ் ஹீரோவாக உலா வருபவர் பாலகிருஷ்ணா. 14 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், அடுத்த 10 ஆண்டுகளில் கதாநாயகன் அவதாரம் எடுத்து கலக்கி வருகிறார். சினிமாவில் ‘பொன்விழா’ கண்ட பாலகிருஷ்ணா, 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ‘கிங் ஆப் மாஸ்’ என தெலுங்கு சினிமாவில் கொண்டாடப்படும் இவர், ரசிகர்களால் பாலையா எனவும் அழைக்கப்படுகிறார்.

பன்ச் வசனங்கள், அதிரடியான ஆக்சன் காட்சிகள் மூலம் அமளிதுமளி செய்யும் பாலகிருஷ்ணா நடிப்பில், கடந்த 2021 ஆம் ஆண்டு ‘அகண்டா’ திரைப்படம் வெளியானது. இப்படத்தை போயப்பட்டி ஸ்ரீனு இயக்கியிருந்தார். அகண்டா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் ஸ்ரீனு இயக்கத்தில் உருவானது.

இதன் டிரைலர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், டிசம்பர் 5 ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால், படத்தை வெளியிடுவதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், திட்டமிட்டபடி படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அகண்டா-2 படத்தை தயாரித்த 14 Reels Entertainment Private Limited என்ற நிறுவனத்துக்கும், Eros International Media Limited என்ற நிறுவனத்துக்கும் இடையில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை இருந்துள்ளது. இந்த விவகாரத்தை தீர்த்து வைக்க மத்தியஸ்தர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, ஈரோஸ் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய 11 கோடியே 22 லட்சம் ரூபாயை, 14 சதவீத வட்டியுடன், 27 கோடியே 70 லட்சம் ரூபாயாக வழங்க வேண்டும் என்று 14 ரீல்ஸ் நிறுவனத்திற்கு மத்தியஸ்தர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை அமல்படுத்தாத வரை நடிகர் பாலகிருஷ்ணா நடித்துள்ள அகண்டா-2 திரைப்படத்தை வெளியிட, 14 Reels நிறுவனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று Eros நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சி.குமரப்பன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கொடுக்கல், வாங்கல் பிரச்சினை தொடர்பாக தனி நீதிபதி முன்பு வழக்கு விசாரணைக்கு பட்டியலிடும் வரை, படத்தை வெளியிடக் கூடாது என்று கூறிய நீதிபதிகள், அகண்டா இரண்டாம் பாகத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், பணப்பிரச்சினை தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் போது, படத்திற்கான தடையை நீட்டிப்பது குறித்து தனி நீதிபதி முடிவெடுத்துக் கொள்ளலாம் எனவும், இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, அகண்டா-2 படத்தின் தயாரிப்பு நிறுவனமான 14 ரீல்ஸ், திட்டமிட்டபடி படத்தை வெளியிட முடியாததற்கு வருத்தம் தெரிவித்துள்ளது. அத்துடன், கூடிய விரைவில் வெள்ளித்திரையில் வெளியிடப்படும் என கூறியுள்ளது. இதனால், பாலகிருஷ்ணாவின் அகண்டா-2 படம் எப்போது திரைக்கு வரும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்