திருமணத்திற்குப் பின் புதுமண ஜோடிகள் ஏன் தனியாக வாழ வேண்டும்..?
1 மார்கழி 2025 திங்கள் 12:16 | பார்வைகள் : 117
‘மகிழ்ச்சியான மனைவி, மகிழ்ச்சியான வாழ்க்கை’என்கிற இந்த வரி கிண்டலாகப் பயன்படுத்தப்பட்டாலும், அதில் ஒரு முக்கியமான உண்மையும் மறைந்திருக்க தான் செய்கிறது. சமீபத்தில் உறவு ரீதியான ஆலோசகரும், எழுத்தாளருமான அஜய் கே பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பதிவில் திருமண வாழ்க்கையை சுமூகமாக வைத்திருக்க உதவும் சில முக்கிய ஆலோசனைகளை பகிர்ந்துள்ளார். குறிப்பாக, “திருமணத்தின் முதல் ஐந்து ஆண்டுகளில் தம்பதிகள் பெற்றோருடன் தங்காமல், தனியே வாழ வேண்டும்” என்கிற அவரது அறிவுரை சமூக ஊடகங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
உளவியலில் முனைவர் பட்டம் பெற்ற அஜய், மனிதர்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்க தேவையான அறிவுரை மற்றும் தீர்வுகளை வழங்குபவர் ஆவார். ஆரோக்கியமான உறவுகளை கட்டியமைக்க, அவர் நடைமுறை வழிகாட்டுதல்கள் மற்றும் உணர்ச்சி சார்ந்த புரிதல்களையும் வழங்குகிறார். ஹிந்துஸ்தான் டைம்ஸில் வெளிவந்த தகவல்படி, பாண்டே தனது பதிவில் தம்பதிகள் தனியாக வாழ வேண்டிய ஏழு முக்கிய காரணங்களை விளக்கியுள்ளார். மேலும் அவர், “எப்போதும் உங்கள் மனைவிக்கு முன்னுரிமை கொடுங்கள்” என்ற வரியின் மூலம் தனது பதிவை தொடங்குகிறார்.
திருமணத்தின் அடித்தளம், ஒருவருக்கொருவர் முன்னுரிமை அளிப்பதில் தான் இருக்கிறது. குடும்பத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது முக்கியமாக இருந்தாலும், அதன் பெயரில் துணையின் உணர்வுகளை புறக்கணிக்கக் கூடாது என அஜய் வலியுறுத்துகிறார். ஆரோக்கியமான உறவை தக்கவைத்துக் கொள்ள, தம்பதிகள் தங்களது விருப்பங்கள், நடவடிக்கைகள், முடிவுகள் என அனைத்திலும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும்
தொடர்ந்த திருத்தங்கள் தன்னம்பிக்கையை குலைக்கும். வாழ்க்கைத் துணைக்கு வழிகாட்டுவதற்குப் பதிலாக, அவரை ஊக்குவிக்கவும், பாராட்டவும் வேண்டும். பாதுகாப்பான, உணர்ச்சி சார்ந்த இடத்தை உருவாக்குவதால், உறவில் நம்பிக்கை கூடுகிறது. இதுவே, சக்திவாய்ந்த திருமணத்தின் முக்கிய தூணாகும்.
திருமணத்தில் பொறுப்புகள், பழக்கவழக்கங்கள், சமூகச் சடங்குகள் போன்றவை முக்கியத்துவம் பெறுகின்றன. ஆனால், பாண்டேவின் கருத்துப்படி, இதுபோன்ற சடங்குகளை விட காதல் தான் முக்கியமானது. தினசரி வாழ்க்கையில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், தம்பதிகள் தங்களுக்குள் உள்ள உணர்வுபூர்வமான நெருக்கத்தை பேணி பாதுகாக்க வேண்டும்.
இங்கு பலருக்கும் “சுதந்திரம் என்பது அனுமதியாக மாறுகிறது” என்று அஜய் கூறுகிறார். திருமணத்திற்குப் பிறகு பெண்கள் தங்கள் பழக்கவழக்கங்கள், சீரான உடல், நேரம் என அனைத்தையும் மாற்றிக் கொள்ளும் அழுத்தம் அதிகமாக இருக்கும். இதுபோன்ற நேரத்தில் விமர்சிக்காமல், குறை கூறாமல், ஒருவருக்கொருவர் தங்களுடைய தனிப்பட்ட தேர்வுகளைத் தக்கவைத்துக் கொள்ளும் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்.
பாண்டே கூறும் மிக அழகான வரிகளில் ஒன்று, “கதவுகள் மூடப்பட்டால், இதயங்கள் திறக்கின்றன.”
அதாவது, தனிப்பட்ட நேரம் தம்பதிகளுக்கிடையே வெளிப்படையான, உண்மையான உரையாடல், சிரிப்பு, நெருக்கம் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. இப்படியான பயமோ, தீர்ப்போ இல்லாத சூழலில் தான், காதல் ஆழமாகி வலுவடைகிறது.
ஒரே வீட்டில் இருந்தாலும், இருவருக்கும் தனிப்பட்ட இடம் என்ற ஒன்று தேவை. தனிப்பட்ட நேரம், தனிப்பட்ட விருப்பங்கள், தனிப்பட்ட இடைவெளி போன்றவை மூச்சுத் திணறலை குறைத்து, உறவை ஆரோக்கியமாக்குகின்றன. அதிகப்படியான உரிமை, குடும்ப தலையீடு, கூட்ட நெருக்கம் போன்றவை உறவின் இயற்கையான அமைதியை குலைக்கக்கூடும்.
குறைந்தப்பட்சம் சில ஆண்டுகள் தனியாக வாழ்வதால் தம்பதிகளுக்கு இடையே உண்மையான புரிதல் உருவாகும் என்று கூறி பாண்டே தனது கருத்தை முடிக்கிறார்.
அதாவது, “இரவு உணவைத் தவிர்த்துவிட்டு பீட்சா ஆர்டர் செய்யலாமா? படுக்கையில் நொறுக்குத் தீனிகள் சாப்பிட்டு சிரித்துக் கொள்ளலாம். எந்த விதிகளும் இல்லை, கட்டுப்பாடும் இல்லை, நாங்கள் மட்டும் தான் என்கிற உணர்வு இருக்கும்.”
பெற்றோர் அறிவுரைகள், குடும்ப கட்டுப்பாடுகள் இல்லாத ஒரு சுதந்திரமான வாழ்க்கை தான் தம்பதிகளின் தனித்துவமான உலகை குறிக்கிறது என்று அவர் அறிவுறுத்துகிறார்.
இந்திய குடும்ப அமைப்பில் கூட்டு குடும்பம் என்பது இயல்பான ஒன்று தான். எனவே, பாண்டே பகிர்ந்த இந்த கருத்துகள் அனைவருக்கும் பொருந்த வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், தம்பதிகளின் உணர்ச்சி சார்ந்த பாதுகாப்பு, நெருக்கம், புரிதல் ஆகியவற்றை முதன்மைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த காலம் வலியுறுத்துகிறது. சில சமயங்களில் தனியாக வாழ்வது, உறவை வலுப்படுத்துவதற்கான முக்கிய அடித்தளமாக அமையும் என்பதே நிதர்சனமான உண்மை.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan