Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் 334 பேர் பலி: மீட்பு பணியில் இந்திய வீரர்கள்

இலங்கையில் 334 பேர் பலி: மீட்பு பணியில் இந்திய வீரர்கள்

1 மார்கழி 2025 திங்கள் 08:13 | பார்வைகள் : 101


இலங்கையில், டிட்வா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 334 ஆக உயர்ந்துள்ளது.

வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக, கடந்த சில நாட்களாக நம் அண்டை நாடான இலங்கையில் கனமழை கொட்டித் தீர்த்தது.

பலத்த சூறாவளி காற்றால், இலங்கை கிழக்கு பகுதியின் பெரும்பாலான இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.

கொழும்பு, மட்டக்களப்பு உட்பட நாடு முழுதும் கொட்டிய மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பலியானோர் எண்ணிக்கை 334 ஆக உயர்ந்துள்ளது.

மாயமான 350க்கும் மேற்பட்டோரை தேடும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுஉள்ளனர்.

இங்கு, அவசர நிலை பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கைக்கு உதவும் வகையில், நம் விமானப் படை விமானங்கள் மற்றும் கடற்படையின் கப்பல்கள் அந்நாட்டுக்கு விரைந்துள்ளன.

'ஆப்பரேஷன் சாகர் பந்து' திட்டத்தின் வாயிலாக, நம் விமானப் படைக்கு சொந்தமான இரு விமானங்களில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் 80 பேர் மற்றும் 21 டன் அத்தியாவசியப் பொருட்கள் இலங்கைக்கு நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்நிலையில், மேலும் ஒரு விமானத்தில் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த விமானம், அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வர பயன்படுத்தப்படும் என விமானப் படை தெரிவித்துள்ளது.

விமானப் படைக்கு சொந்தமான 'எம்.ஐ., 17 - வி 5' ஹெலிகாப்டரும் கொழும்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இருந்து நிவாரணப் பொருட்களுடன் புறப்பட்டுள்ள ஐ.என்.எஸ்., சுகன்யா கப்பல், இன்று இலங்கை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர, கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ்., விக்ராந்த் கப்பலில் இருந்து இரு ஹெலிகாப்டர்கள், அங்கு மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்திய பயணியர் 400 பேர் மீட்பு

புயல் மற்றும் மழை வெள்ளத்தால் விமானங்கள் ர த்து செய்யப்பட்டதை அடுத்து, இலங்கை கொழும்பு வின் பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில், இந்தியர்கள் 400 பேர் சிக்கி தவித்தனர். இவர்கள் அனைவரும் நேற்று விமானப் படை விமானங்கள் வாயிலாக, தாயகம் அழைத்து வரப்பட்டனர். நிவாரணப் பொருட்களை எடுத்து  சென்ற சி 130 விமானம் வாயிலாக, 150 பேர் டில்லிக்கும், ஐ.எல்., 76 விமானம் வாயிலாக 250 பேர் கேரளாவின், திருவனந்தபுரத்துக்கும் அழைத்து வரப்பட்டனர். பின்னர், அவர்கள் பஸ் மற்றும் கார்களில் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்