Paristamil Navigation Paristamil advert login

இலங்கை முழுவதும் சிரற்ற வானிலை - நெடுந்தீவு மக்களுக்கு அவசர அறிவித்தல்!

இலங்கை முழுவதும் சிரற்ற வானிலை - நெடுந்தீவு மக்களுக்கு அவசர அறிவித்தல்!

26 கார்த்திகை 2025 புதன் 16:36 | பார்வைகள் : 121



நாட்டின் பல பகுதிகளில் 150 மில்லி மீற்றிரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இலங்கைக்கு தென்கிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் வடக்கு முதல் வடமேற்குத் திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் அது அடுத்த 24 மணித்தியாலங்களில் படிப்படியாக தாழமுக்கமாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால் நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லி மீற்றிரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 100  மில்லி மீற்றிரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழிலில் ஈடுபடுவோர் நாளை முதல் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக நாட்டின் 12 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் கண்டி மற்றும் நுவரெலியா மாட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தின் உடுதும்பர மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, ஹங்குரன்கெத்த, நிலதண்டாஹின்ன மற்றும் மத்துரட ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஹப்புத்தளை நகருக்கருகில் ஏற்பட்ட மண்சரிவின் காரணமாக பதுளை – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மகாவலி கங்கை ஆற்றுப் படுக்கையைச் சுற்றியுள்ள சில பிரதேசங்களுக்கு அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களிால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன்  செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடற்போக்குவாரத்து பாதிக்கப்பட்டுள்ளமையால் நெடுந்தீவு மக்களை மிக அவதானமாக இருக்குமாறு நெடுந்தீவு வைத்தியசாலை நிர்வாகம் கோரியுள்ளது.

சீரற்ற காலநிலையால் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இருந்து கடல் வழியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக நோயளர்களை இடமாற்றீடு செய்ய முடியாத நிலை காணப்படுகிறது.

எனவே நெடுந்தீவு மக்கள் அனைவரையும் விபத்துக்கள், பாம்பு கடி உள்ளிட்ட தவிர்க்க கூடிய நோய் நிலைகளை குறைத்து வீடுகளில் அவதானமாக இருக்குமாறு நெடுந்தீவு வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கடற் போக்குவரத்து தடைப்பட்டுள்ள நிலையில் நெடுந்தீவு வைத்திய அதிகாரியினால் நோயாளிகளை யாழ்ப்பாணத்திற்கு மேலதிக சிகிச்சைக்காக வான் வழியாக அனுப்பி வைக்க விமான படையினர் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

வர்த்தக‌ விளம்பரங்கள்