Paristamil Navigation Paristamil advert login

பன்னீர்செல்வம், தினகரனுக்கு அ.தி.மு.க., மாஜி மறைமுக அழைப்பு

பன்னீர்செல்வம், தினகரனுக்கு அ.தி.மு.க., மாஜி மறைமுக அழைப்பு

29 மார்கழி 2025 திங்கள் 06:02 | பார்வைகள் : 481


சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்த, ஒன்றுபட்ட கருத்துள்ளவர்கள் அ.தி.மு.க.,வுக்கு வாருங்கள்,” என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

மதுரையில் நேற்று அவர் பேட்டி அளித்தபோது, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.,வில் மீண்டும் இணைப்பது குறித்தும், கூட்டணிக்குள் அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் வருவது குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்து உதயகுமார் கூறியதாவது: மக்கள் விரோத தி.மு.க., அரசு மீது அ.தி.மு.க., தவிர வேறு யாரும் கண்டன குரல்களை எழுப்பவில்லை. கடந்த 2021 தேர்தலில் தி.மு.க., அளித்த 525 வாக்குறுதிகளில், 10 சதவீதத்தை கூட நிறைவேற்றவில்லை. சட்டசபையை பார்க்காத சிலர் அ.தி.மு.க., குறித்து பேசுகின்றனர்.

சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்பதே அ.தி.மு.க.,வின் நோக்கம். முன்னாள் முதல்வர் பழனிசாமி தலைமையை ஏற்று, ஒன்றுபட்ட கருத்துள்ள யாரும் இங்கு வரலாம். அ.தி.மு.க., பொதுக்குழுவிலும் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

அவரது தலைமை ஏற்று அனைவரும் வர வேண்டும். இந்த அழைப்பு தேவையானவர்களுக்கு புரியும்; யாரும் தயங்க தேவையில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

பன்னீர்செல்வம், தினகரன் ஆகிய இருவருக்கும், உதயகுமார் சூசகமாக அழைப்பு விடுத்துள்ளார். ஏற்கனவே, அ.தி.மு.க.,வில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் த.வெ.க.,வில் இணைந்துள்ளார்.

தற்போது, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் த.வெ.க., பக்கம் சாய்ந்தால், அந்த கட்சிக்கு அ.தி.மு.க., பிம்பம் ஏற்பட்டு விடும் என்ற அச்சம் காரணமாக, உதயகுமார் இவ்வாறு கூறினாரா என கேள்வி எழுந்துஉள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்