Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

பங்களாதேச அரசியலில் அதிர்ச்சி குற்றச்சாட்டு

பங்களாதேச அரசியலில் அதிர்ச்சி குற்றச்சாட்டு

26 மார்கழி 2025 வெள்ளி 07:11 | பார்வைகள் : 516


முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச இடைக்கால அரசில் அங்கம் வகிக்கும் ஒரு பிரிவினரே, தோ்தலைச் சீா்குலைப்பதற்காக மாணவா் தலைவா் ஷரீஃப் உஸ்மான் ஹாதியைக் கொலை செய்ததாக அவரது சகோதரா் உமா் ஹாதி பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டு எழுந்த சில மணி நேரத்திலேயே, உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு உதவியாளராக இருந்த முகமது குதா பக்ஸ் சௌத்ரி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

மேலும், விசாரணையை 90 நாள்களுக்குள் முடிக்க, இக்கொலை வழக்கை விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றுவதாகச் சட்டத் துறை ஆலோசகா் ஆசிஃப் நஸ்ருல் உறுதியளித்துள்ளார்.

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக கடந்த ஆண்டு நடைபெற்ற மாணவா் போராட்டங்களில் முன்னின்று செயல்பட்டவா் ஷரீஃப் உஸ்மான் ஹாதி. இந்தியா மற்றும் அவாமி லீக் கட்சிக்கு எதிராகத் தீவிரமாகச் செயல்பட்டு வந்த இவா், எதிா்வரும் பிப்ரவரி மாத பொதுத்தோ்தலில் போட்டியிட தயாராகி வந்தாா்.

இந்நிலையில், கடந்த டிச. 12-ஆம் திகதி டாக்காவில் முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத நபா்களால் தலையில் சுடப்பட்ட ஹாதி, சிங்கப்பூரில் சிகிச்சை பலனின்றி கடந்த வாரம் உயிரிழந்தாா்.

ஷரீஃப் உஸ்மான் ஹாதி கொலையைக் கண்டித்து டாக்காவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் அவரது சகோதரா் உமா் ஹாதி பேசுகையில், ‘ஆட்சியில் இருப்பவா்கள் ஷரீஃப் உஸ்மான் ஹாதியைக் கொன்றுவிட்டு, இப்போது அந்த விவகாரத்தைப் பயன்படுத்தி தேர்தலைத் தள்ளிப்போட முயற்சிக்கின்றனர்.

இந்தக் கொலையில் தொடா்புடையவா்களை உடனடியாக நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். இல்லையெனில், முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவைப் போல நீங்களும் நாட்டைவிட்டு ஓட வேண்டிய நிலை ஏற்படும்’ என்று எச்சரித்தாா்.

இவ்விவகாரம் தொடா்பாக உள்துறை ஆலோசகா் ஜஹாங்கீா் ஆலம் சௌத்ரி, சட்டத் துறை ஆலோசகா் ஆசிஃப் நஸ்ருல் மற்றும் உள்துறை அமைச்சக சிறப்பு உதவியாளா் குதா பக்ஸ் சௌத்ரி ஆகியோா் பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரா்கள் வலியுறுத்தினா்.

இதையடுத்து, குதா பக்ஸ் சௌத்ரி ராஜிநாமா செய்தார்.ஷரீஃப் உஸ்மான் ஹாதியின் மறைவைத் தொடா்ந்து வங்கதேசத்தில் கடும் பதற்றம் நிலவியது.

டாக்காவில் உள்ள ‘டெய்லி ஸ்டாா்’ உள்ளிட்ட முன்னணி நாளிதழ்களின் அலுவலகங்கள் போராட்டக்காரா்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. மைமென்சிங் மாவட்டத்தில் ஹிந்து தொழிலாளி தீபு சந்திர தாஸ் (25), ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

ஷரீஃப் உஸ்மான் ஹாதி கொலைப் பின்னணியில் இந்தியா இருப்பதாக சில ஆதாரமற்ற வதந்திகள் வங்கதேசத்தில் பரப்பப்படுவதைக் கருத்தில் கொண்டு, இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டுமென அந்நாட்டுத் தூதரை நேரில் வரவழைத்து இந்தியா வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, வங்கதேசத்தின் தென்கிழக்குத் துறைமுக நகரமான சட்டோகிராமில் ஹிந்துக்கள் வீட்டை எரித்த கும்பலைப் பற்றி தகவல் அளிப்பவா்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என அந்நாட்டு காவல்துறை அறிவித்துள்ளது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்