Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை!

இலங்கையில் அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை!

16 மார்கழி 2025 செவ்வாய் 16:25 | பார்வைகள் : 192


வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் வீதித் தடைகள் காரணமாக சேவைக்கு வர முடியாத அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரால் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு நேற்றைய தினம் (16) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ‘டித்வா’ புயல் காரணமாக தமது வதிவிடத்திலிருந்து சேவை நிலையத்திற்கு பொதுப் போக்குவரத்துச் சேவைகள் தடைப்பட்டதால் சேவைக்கு சமூகமளிக்க முடியாத உத்தியோகத்தர்கள், வீதித் தடைகள் காரணமாக அல்லது அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டமை காரணமாக சேவைக்கு சமூகமளிக்க முடியாத உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு இந்த விசேட விடுமுறை வழங்கப்படுகின்றது.

அரசாங்க உத்தியோகத்தர்கள் தாம் கடமைக்கு சமூகமளிக்க முடியாத காரணத்தைக் குறிப்பிட்டு, பிரதேச செயலாளரால் சான்றுப்படுத்தப்பட்ட தமது பகுதியின் கிராம உத்தியோகத்தரின் பரிந்துரையுடன் கூடிய விண்ணப்பத்தை நிறுவனத் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

பிரதேச செயலாளரால் சான்றுப்படுத்தப்பட்ட உத்தியோகத்தரின் விண்ணப்பத்தை நிறுவனத் தலைவர் பரிசீலித்து, அதன் சரியான தன்மை குறித்து தனிப்பட்ட ரீதியில் திருப்தியடைந்தால் மட்டுமே, சேவைக்கு சமூகமளிக்க முடியாத நாட்களின் எண்ணிக்கைக்கான விசேட விடுமுறையை அங்கீகரிப்பதற்காக திணைக்களத் தலைவருக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விசேட விடுமுறை வழங்குதல் நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களுக்கு மாத்திரம் பொருத்தமான வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்