Paristamil Navigation Paristamil advert login

“ஆண்களும் பெண்களும் ஏன் எதிர் மனங்களுடன் படைக்கப்படுகிறார்கள்?

“ஆண்களும் பெண்களும் ஏன் எதிர் மனங்களுடன் படைக்கப்படுகிறார்கள்?

19 கார்த்திகை 2025 புதன் 14:42 | பார்வைகள் : 128


ஆண்களும் பெண்களும் “இருமுனை மனநிலையுடன்” பிறக்கவில்லை. இன்று நாம் காணும் சிந்தனையில் உள்ள வேறுபாடுகள் இயற்கையிலிருந்து வந்தவை அல்ல... அவை சமூகத்திலிருந்து வந்தவை. சற்று புரிதலுடன் பார்ப்போம்..

இயற்கையோ, உயிரியலோ எதிர் மனங்களை உருவாக்கவில்லை. அதை இந்த சமூகம் செய்தது. ஆண்களும் பெண்களும் ஒரே மாதிரியான உணர்ச்சி மற்றும் அறிவுசார் திறனைக் கொண்டுள்ளனர் என்பதை அறிவியல் நிரூபிக்கிறது. பெண்களாலும் தர்க்கரீதியாக வழிநடத்த முடியும். ஆண்களாலும் ஆழமாக உணர முடியும்.பெண்களால் தைரியமான முடிவுகளை எடுக்க முடியும். ஆண்களால் மென்மையை வெளிப்படுத்த முடியும். ஆனால் குழந்தைப் பருவத்திலிருந்தே...
இங்கு ஆண்களிடம் சொல்லப்படுகிறது:

“அழாதே. ஆண்கள் அழக்கூடாது. வலிமையாக இரு. உன் உணர்வுகளை வெளி காட்டாதே.” பெண்களிடம் சொல்லப்படுகிறது: “அமைதியாக இரு. சத்தமாக சிரிக்காதே, சத்தமாக பேசாதே. எதிர்த்து பேசாதே. அமைதியாக வாழ கற்றுக்கொள். அனுசரிச்சு போகலனா வாழ முடியாது” இது இயற்கையல்ல. இது நாம் ஏற்படுத்திய கொடூரமான பயிற்சி.

5,000 ஆண்டுகள் பழமையான விதிகள் இன்னும் நவீன வாழ்க்கையைக் கட்டுப்படுத்துகின்றன. நீண்ட காலத்திற்கு முன்பு, மனிதர்களின் வாழ்க்கை முறைக்கு யார் எந்த வேலையை செய்வது என்ற புரிதல் தேவைப்பட்டன. ஆண்கள் வேட்டையாட கிளம்பினார். பெண்கள் குழந்தைகளைப் பாதுகாத்தனர். இது மன பலம் சார்ந்து அல்ல. உடல் பலம் சார்ந்து இருவருக்குள் புரிதலுடன் அன்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த உலகம் போய்விட்டது. காலம் மாறிவிட்டது.

பெண்கள் அதிகமாகப் படிக்கிறார்கள். பெண்கள் அதிகமாக சம்பாதிக்கிறார்கள். பெண்கள் நிறுவனங்களை வழிநடத்துகிறார்கள். ஆண்கள் சமைக்கிறார்கள், பராமரிக்கிறார்கள், குடும்பத்தை உருவாக்குகிறார்கள். ஆனாலும் சமூகம் இன்னும் புதிய மனங்களில் பழைய விதிகளைத் திணிக்கிறது.  பழைய மனநிலை + நவீன சுதந்திரம் = மோதல். இதனால்தான் உறவுகள், பணியிடங்கள் மற்றும் குடும்பங்களில் பாலினப் பிரச்சினைகள் வெடிக்கின்றன.

ஆண்களும் பெண்களும் எதிரெதிர் இல்லை — அவர்கள் பகிரும்  தன்மை கொண்டவர்கள். ஒரு ஆபத்தான கட்டுக்கதையை உடைப்போம்: “ஆண்கள் = தர்க்க ரீதியானவர்கள்பெண்கள் = உணர்ச்சி ரீதியானவர்கள்” இது முற்றிலும் தவறு. ஒவ்வொரு மனிதனும் இரண்டின் கலவை. சில ஆண்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுபவர்கள்.சில பெண்கள் மிகவும் தர்க்கரீதியானவர்கள்.

ஆளுமை என்பது இங்கு மனிதனுக்கு சொந்தமானது, பாலினத்திற்கு அல்ல. பாலின சண்டைகள் எல்லா இடங்களிலும் ஏன் நடக்கின்றன? இந்த சமூகம் கட்டமைத்து உருவாக்கிய சில விஷயங்கள்: பெண்கள் மீது கடுமையான எதிர்பார்ப்புகள் அதிகார ஏற்றத்தாழ்வு  ஆண்களின் மீதான உணர்ச்சி அடக்குமுறை பெண்களின் மீதான சுதந்திர அடக்குமுறை இந்த காரணங்களால் தான்  பெண்கள் சுதந்திரமில்லாதவர்களாக உணர்கிறார்கள் ஆண்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறார்கள் உறவுகள் கனமாக உணரப்படுகின்றன  பணியிடங்கள் சமமற்றதாக உணரப்படுகின்றன இயற்கை காரணமாக அல்ல. கட்டமைப்பு காரணமாக.

ஆதிக்கம் இதற்கு தேர்வு அல்ல. சமநிலையே தீர்வு. ஒரு ஆரோக்கியமான சமூகம் எப்படி கட்டமைக்கப்பட வேண்டும்?: ஆண்கள் உணர்வுகளை வெளிக்காட்ட அனுமதிக்கப்படுத்தல்.  பெண்கள் வழிநடத்த, தலைமை ஏற்க அனுமதிக்கப்படுதல். ஆண்கள்  அழலாம் பெண்கள் பெரிய கனவு காணலாம் ஈகோவிற்கு பதில் மரியாதை பழமைவாதற்திற்கு பதில் சமத்துவம்  பாலினம் பார்க்காத நட்புறவு, மனிதநேயம். பழைய போதனையை உடைக்கும்போது மட்டுமே, புதிய சிந்தனைகளை வளர்க்க முடியும்.

ஆண்களும் பெண்களும் எதிரிகள் அல்ல. அவர்கள் எதிரெதிர் மனிதர்கள் அல்ல. அவர்கள் ஒரே ஆன்மாவின் இரண்டு பதிப்புகள் மகிழ்ச்சியான பாலினம் தாண்டிய ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டுமானால்... நாம் மக்களை மாற்ற வேண்டிய அவசியமில்லை. மக்கள் தயாராகி விட்டார்கள். அவர்களை கட்டுப்படுத்தும் விதிகளை மட்டுமே நாம் மாற்ற வேண்டும்.

அடுத்த தலைமுறைக்கு ஒரு "ஆண்" எப்படி இருக்க வேண்டும் அல்லது ஒரு "பெண் எப்படி இருக்க வேண்டும்" என்று கற்பிப்பதை விட, ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதை கற்பிப்போம். மனிதத்தை கற்பிப்போம். இதில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிக அவசியம். புரிந்தால் வாழ்க்கை உங்களுடையது.. வாழ்த்துக்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்