Paristamil Navigation Paristamil advert login

இனவாத தீயை மூட்டுவதற்கு எவருக்கும் இடமில்லை ஜனாதிபதி அநுர அறிவிப்பு

இனவாத தீயை மூட்டுவதற்கு எவருக்கும் இடமில்லை ஜனாதிபதி அநுர அறிவிப்பு

19 கார்த்திகை 2025 புதன் 13:14 | பார்வைகள் : 256


திருகோணமலை  புத்தர் சிலை பிரச்சினை  முடிந்துள்ளது. நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏன் இன்னும் ஆடுகிறார்கள். இனவாதிகள் இனவாத தீயை பற்றவைத்துக் கொண்டு திரிகிறார்கள். இனவாதத்துக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. நான் இல்லை. பௌத்த மக்களும் இனவாதத்துக்கு இடமளிக்க போவதில்லை. தமிழ், முஸ்லிம்களும் இடமளிக்க போவதில்லை. இலங்கையின் எதிர்காலம் இனவாதத்தில் எழுதப்படப்படாது  என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற   2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில்  பாதுகாப்பு அமைச்சு மற்றும்  பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள்  அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும்  உரையாற்றியதாவது,

திருகோணமலை விவகாரம் தற்போது சர்ச்சைக்குரியதாக காணப்படுகிறது. ஆகவே இவ்விடயம் பற்றி குறிப்பிட வேண்டும் . இந்த நாடு கடந்த காலங்களில் பல இனவாத மற்றும் மதவாத முரண்பாடுகளுக்கு முகங்கொடுத்துள்ளது. ஜனநாயகம் அழிவடையும் போதும், பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போதும் அரசாங்கங்கள் வீழ்ச்சியடையும் கடந்த காலங்களில் இவ்வாறான தன்மையே காணப்பட்டன.

ஜனநாயகம் மற்றும் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்டுள்ள நிலையில்  தோல்வியடைந்த அரசியல்  தரப்பினர் தற்போது இனவாதம் மற்றும் மதவாதத்தை கையில் எடுத்துள்ளார்கள். திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் குறித்து பாதுகாப்பு அமைச்சிடம் அறிக்கை கோரியுள்ளேன். இந்த விடயத்துக்கு நீதிமன்றத்தின் ஊடாகவே தீர்வு காண முடியும்.

இதுவரை காலமும் அந்த இடம் விகாரையாக அடையாளப்படுத்தப்படவில்லை. சிற்றுண்டிச்சாலையாகவே  அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.இந்த காணி குறித்து கரையோர அதிகார சபை முறைப்பாடளித்து,  அங்கு நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தை அகற்றுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன் பின்னர் இந்த கட்டிடத்தை அகற்றுவதற்கு ஒருவார காலவகாசம் கோரப்பட்டுள்ளது. இறுதி தினத்தன்று தான் இந்த சம்பவம் இடம்பெற்று,  புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யப்பட்டு, பிரச்சினை தோற்றம் பெற்றுள்ளது.

திருகோணமலை  புத்தர் சிலை பிரச்சினை  முடிந்துள்ளது. நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏன் இன்னும் ஆடுகின்றீர்கள்.இனவாதிகள் இனவாத தீயை பற்றவைத்துக் கொண்டு திரிகிறார்கள். இனவாதத்துக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. நான் இல்லை. பௌத்த மக்களும் இனவாதத்துக்கு இடமளிக்க போவதில்லை.தமிழ்,முஸ்லிம்களும் இடமளிக்க போவதில்லை. இலங்கையின் எதிர்காலம் இனவாதத்தில் எழுதப்படப்படாது  என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்