Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் முச்சக்கர வண்டி ஓட்டும் வெளிநாட்டவர்கள்: உரிமையாளர்களுக்கு அபராதம்!

இலங்கையில் முச்சக்கர வண்டி ஓட்டும் வெளிநாட்டவர்கள்: உரிமையாளர்களுக்கு அபராதம்!

16 கார்த்திகை 2025 ஞாயிறு 14:06 | பார்வைகள் : 180


இலங்கையில், செல்லுபடியான சர்வதேச சாரதி அனுமதிப் பத்திரம் (International Driving Permit) அல்லது தமது சொந்த நாட்டின் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டவர்கள் எந்தவொரு வாகனத்தையும் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் எப். யூ. வூட்லர் நினைவுபடுத்தியுள்ளார்.

சுற்றுலாப் பயணிகள் சட்டவிரோதமாக முச்சக்கர வண்டிகளை ஓட்டிச் செல்லும் போக்கு அதிகரித்து வருவதைக் காவல்துறை அவதானித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது சட்டவிரோதமானது என்றும், இந்த வாடகை வாகனங்களின் உரிமையாளர்களுக்கு எதிராகக் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் தெரிவித்தார்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் பயணிகள் என அனைவரும் நாட்டில் வாகனங்களைப் பயன்படுத்தும்போது இலங்கையின் மோட்டார் வாகன போக்குவரத்துச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளுக்குக் கண்டிப்பாகக் கட்டுப்பட வேண்டும்.

செல்லுபடியான அனுமதிப்பத்திரம் இல்லாமல் பல வெளிநாட்டவர்கள் வாகனம் ஓட்டுவது கண்டறியப்பட்டதால், அவர்களுக்கு எதிராக காவல்துறை, சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டுப் பிரஜைகள் செல்லுபடியான சர்வதேச சாரதி அனுமதிப் பத்திரத்துடன் சட்டப்பூர்வமாக வாகனம் ஓட்டலாம் அல்லது சொந்த நாட்டில் வழங்கப்பட்ட உள்நாட்டுச் சாரதி அனுமதிப் பத்திரத்துடன் மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்திடம் இருந்து சான்றிதழ் அல்லது அங்கீகாரம் பெற்ற பின்னரே வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுவார்கள் என காவல்துறை தெரிவிக்கிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்