Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

தலைமுடிக்கு அதிசயத்தை நிகழ்த்தும் முருங்கை கீரை

தலைமுடிக்கு அதிசயத்தை நிகழ்த்தும் முருங்கை கீரை

4 கார்த்திகை 2025 செவ்வாய் 15:16 | பார்வைகள் : 1350


முருங்கை என்பது நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு விதமான சத்துக்களை கொண்ட ஒரு கீரை வகை என்பதை நாம் அறிவோம். ஆனால் அதே சமயத்தில் முருங்கை இலையானது தலைமுடிக்கு தேவையான அத்தனை ஊட்டச்சத்துக்களையும் கொண்டதாகவும் திகழ்கிறது. இதில் உள்ள வைட்டமின்களும், தாதுக்களும் வலுவிழந்த மற்றும் பொலிவில்லாமல் இருக்கும் தலைமுடியை அடர்த்தியாக்கி, பளபளப்பாக மாற்றுகிறது. வழக்கமான முறையில் முருங்கைக் கீரையை சாறாகவோ அல்லது பொடியாகவோ கீரையாகவோ சாப்பிட்டு வர ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சியை நிச்சயமாக பெறலாம்.
தலைமுடிக்கு அதிசயத்தை நிகழ்த்தும் முருங்கை கீரை:

‘அதிசய மரம்’ என்று அழைக்கப்படும் முருங்கையில் வைட்டமின்கள் A, C, சிங்க் மற்றும் இரும்புச்சத்து போன்ற ஆரோக்கியமான தலைமுடிக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துகளும் நிறைந்திருக்கிறது. வைட்டமின் A என்பது தலைமுடியின் வேர்களுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்குகிறது. அதேபோல வைட்டமின் C தலைமுடியை வலிமையாக வைப்பதற்கு தேவையான கொலாஜன் உற்பத்தியை தூண்டுகிறது. மேலும் இரும்பு சத்தானது வேர்களுக்கு ஆக்ஸிஜனை சுமந்து செல்ல உதவுகிறது. மறுபுறம் சிங்க் புதிய தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

இன்று மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் பல்வேறு தலைமுடி பராமரிப்பு பிராண்டுகள் முருங்கை இலையை தங்களுடைய பொருட்களில் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் உணவு மூலமாக சிறந்த முடிவுகளை பெறுவதற்கு முருங்கைக் கீரையை நீங்கள் அன்றாடம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
 

ஒருவேளை காலை நேரத்தில் உங்களுக்கு போதுமான அளவு நேரம் கிடைக்காவிட்டால் முருங்கை இலைகளை விடுமுறை நாட்களின் போது உலர வைத்து அதன் பொடியை தினமும் எடுத்து வரலாம். ஒரு டீஸ்பூன் அளவு முருங்கை பொடியை ஸ்மூத்தி, இளநீர் அல்லது வெதுவெதுப்பான தண்ணீரோடு தேன் கலந்து சாப்பிடலாம். அதே சமயத்தில் சாலட் அல்லது வழக்கமாக நீங்கள் செய்யும் குழம்பு வகைகளில் கலந்தும் எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பொடியானது கெரட்டினின் கட்டுமான தொகுதிகளாக அமையும் புரதச்சத்து மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்ததாக இருக்கிறது. கெரட்டின் என்பது தலைமுடியின் அமைப்பு மற்றும் வலிமைக்கு மிகவும் அவசியம். வழக்கமான முறையில் முருங்கையை எடுத்துக் கொள்வது தலைமுடி உதிர்வை குறைத்து, அதனை அடர்த்தியாக மாற்றி, பளபளப்பை மீட்டுக் கொடுக்கிறது. முருங்கையின் சுவை பிடிக்காதவர்கள் ஹெல்த் ஸ்டோர் மற்றும் ஆன்லைனில் கிடைக்கும் முருங்கை கேப்சூல்களை எடுத்துக் கொள்ளலாம்.

ஃபிரெஷான உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு முருங்கை சாறு சிறந்தது. முருங்கை இலைகளை தண்ணீர் சேர்த்து அரைத்து அதில் அரைமூடி எலுமிச்சம் பழம் சாறு சேர்த்து சாப்பிடலாம். மேலும் அந்த சாற்றோடு தேன் அல்லது சிறிதளவு நெல்லிக்காய் சாறு சேர்ப்பது பானத்தை சுவையானதாக மாற்றும். தினமும் வெறும் வயிற்றில் 30 முதல் 35 ml அளவு முருங்கை கீரை சாறு பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த முருங்கை சாறு உடலில் உள்ள கழிவுகளை அகற்றி, வீக்கத்தை குறைப்பதன் மூலமாக தலைமுடியின் வேர் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதனால் தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும். இது தவிர முருங்கை சாற்றோடு தேங்காய் அல்லது விளக்கெண்ணெய் கலந்து தலைமுடி மற்றும் மயிர் கால்களில் தடவி 30 நிமிடங்கள் ஊற வைத்த பிறகு வழக்கமான ஷாம்பூ பயன்படுத்தி தலைமுடியை அலசி வந்தாலும் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
பாரம்பரிய தலைமுடி ரகசியம்:

பல நூற்றாண்டுகளாகவே முருங்கை தலைமுடி பிரச்சனைகளுக்கு ஒரு வீட்டு சிகிச்சையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. முருங்கை இலையோடு செம்பருத்தி பூக்களை அரைத்து தலைமுடியில் தடவுவதன் மூலமாக நன்மை பெறலாம். ஆயுர்வேதமும் உடலில் உள்ள ஆற்றல்களை சமநிலை செய்யவும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், முடி உதிர்வை குறைக்கவும் முருங்கையை பரிந்துரை செய்கிறது. முருங்கைக் கீரையாகவோ அல்லது முருங்கைக்காய் எடுத்துக் கொள்வதன் மூலமாக உங்களுடைய தலைமுடியை இயற்கையான முறையில் வலுவாக்கலாம்.
உங்களுக்கான ஒன்றை தேர்வு செய்வது:

உங்களுடைய சௌகரியத்தை பொறுத்து முருங்கையை நீங்கள் சாறாகவோ, பொடியாகவோ, கீரையாகவோ எடுத்துக் கொள்ளலாம் அல்லது இரண்டையும் இணைத்து வாரம் இருமுறை முருங்கை சாற்றையும், பிற நாட்களில் பொடியாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதோடு மட்டுமில்லாமல் முருங்கையோடு உங்களுடைய உணவில் பருப்பு வகைகள், பச்சை இலை காய்கறிகள், நட்ஸ் வகைகள் போன்ற ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வதன் மூலமாக சிறந்த பலன்களை பெறலாம்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்