துருவ் விக்ரமுக்கு வெற்றியை கொடுத்ததா ‘பைசன்’?

17 ஐப்பசி 2025 வெள்ளி 16:32 | பார்வைகள் : 868
தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை ஆகிய அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் மாரி செல்வராஜ். இவருடைய இயக்கத்தில் உருவாகியிருந்த பைசன் – காளமாடன் திரைப்படம் இன்று (அக்டோபர் 17) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, அமீர், லால், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.
கிட்டான் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள துருவ், கபடி விளையாட்டின் மீது உயிரையே வைத்திருக்கிறார். பள்ளி பருவத்திலேயே கபடி மீது ஆர்வம் கொண்ட இவரை பள்ளியில் பணிபுரியும் PT மாஸ்டர், பள்ளி கபடி அணியில் சேர்த்து விடுகிறார். ஆனால் இது துருவ் விக்ரமின் தந்தை பசுபதிக்கு பிடிக்காமல் போகிறது. சாதியை வைத்து சொந்தக்காரன் கூட ஊர் அணியில் தன் மகனை சேர்த்துக் கொள்ள மாட்டான் என பயப்படுகிறார். ஆனால் துருவ் விக்ரமை PT மாஸ்டர் அடுத்த கட்டத்திற்கு கூட்டி செல்கிறார்
இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் அமீர் – லால் இருவருக்கும் இடையில் சாதி பிரச்சனை உண்டாக இரு தரப்பினரும் மாறி மாறி வெட்டிக் கொலை செய்கிறார்கள். இப்படி சாதி பிரச்சனைகள் தன்னைச் சுற்றி தலை தூக்கினாலும், தொடர்ந்து கபடி விளையாட்டில் முன்னேறி சாதித்துக் கொண்டே இருக்கிறார் துருவ். ஆனாலும் ஒரு பிரச்சனையில் அவருடைய கை உடைக்கப்படுகிறது. எனவே சாதியை வைத்து தங்களுக்கு நடக்கும் கொடுமைகள், அவமானங்கள் அத்தனையையும் தாண்டி கபடி விளையாட்டில் வெற்றி பெறுகிறாரா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
வழக்கம்போல் மாரி செல்வராஜ் தனது ஸ்டைலில் சிறப்பான கதைக்களத்தை கொடுத்துள்ளார். படம் தொடங்கியது முதல் கடைசி வரையிலும் பதட்டமான திரைக்கதை, கதாபாத்திரங்களை வடிவமைத்த விதம் என மாரி செல்வராஜை பாராட்டுவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. இறுதியில் ஹீரோ தான் கபடி போட்டியில் ஜெயிப்பார் என்பது அனைவருக்கும் தெரிந்தாலும் அதை சுவாரஸ்யமான திரைக்கதையில் கொடுத்து மீண்டும் வெற்றிக் கொடியை நாட்டியுள்ளார் மாரி செல்வராஜ்.
துருவ் விக்ரம் படத்திற்காக போட்டுள்ள கடின உழைப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி படத்தின் தொய்வுகளை மறக்க செய்கிறது. துருவ் – அனுபமாவின் காதல் காட்சிகள் சில இடங்களில் சலிப்பை தருகின்றன. ஆனால் அனுபமா தனது சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். இது தவிர பசுபதியின் நடிப்பு படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது. வழக்கம்போல் அவர், தனக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். இது தவிர லால், அமீர், ரஜிஷா ஆகியோரின் நடிப்பு அருமை. அடுத்தது நிவாஸ் கே பிரசன்னா பின்னணி இசை மற்றும் பாடல்களால் ஸ்கோர் செய்கிறார். அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் அமைந்து ரசிகர்களை ரசிக்க வைக்கிறது. மொத்தத்தில் பைசன் திரைப்படம் அனைவரும் பார்த்துக் கொண்டாட வேண்டிய படம்.