பிரதேச அபிவிருத்திச் சபைகள்: பலமும் பலவீனமும்

12 ஐப்பசி 2025 ஞாயிறு 16:14 | பார்வைகள் : 119
சிறிமாவோ அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பிரதேச அபிவிருத்தி சபைகள் என்ற முன்னெடுப்பின் கீழ் பல பயனுள்ள திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. ஆனால், அவை குறித்துக் கவனம் செலுத்துவது குறைவாகவே உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் வெற்றியளித்த சிலவற்றை இங்கு நோக்கலாம். நுவரெலியா மாவட்டத்தில் உள்ள கொத்மலையில் காகித தயாரிப்பு திட்டம் குறிப்பிடத்தக்கது, அங்கு கழிவு காகிதம், வைக்கோல் ஆகியவற்றைப் பயன்படுத்தி காகிதம், காகித அட்டைகள் ஆகியவற்றின் தயாரிப்பு தொடங்கப்பட்டது.
1977ஆம் ஆண்டு புதிய அரசாங்கத்தால் மூடப்படும் வரை இது ஒரு வெற்றிகரமான திட்டமாக இருந்தது. காலி மாவட்டத்தின் பத்தேகம பிரதேசத்தில் விவசாயப் பண்ணைகளும் பண்ணைக்குரிய கருவிகள் தயாரிப்பிலும் முன்னேற்றம் காணப்பட்டது. பத்தேகம அபிவிருத்தி சபையியின் முன்னெடுப்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் 60 இளைஞர்களைக் கொண்ட கூட்டுறவுப் பண்ணை நிறுவப்பட்டது.
ஆரம்பத்தில் ஒரு புறக்கணிக்கப்பட்ட பழைய பண்ணை கையகப்படுத்தப்பட்டது. அதன் தொழிற்சாலை பழுதுபார்க்கப்பட்டு அதன் ஒரு பகுதி குடியிருப்பாக மாற்றப்பட்டது. 12 ஏக்கர் புறக்கணிக்கப்பட்ட இறப்பர் நிலம் மறுசீரமைக்கப்பட்டு மீள் தொடங்கப்பட்டது.
40 ஏக்கர் புறக்கணிக்கப்பட்ட தேயிலை நிலம் மறுசீரமைக்கப்பட்டது. 20 ஏக்கர் காட்டு நிலம் அகற்றப்பட்டு தென்னை கன்றுகள் நடப்பட்டன. 50 ஏக்கர் புறக்கணிக்கப்பட்ட நெல் நிலம் மறுசீரமைக்கப்பட்டு பயிற்ச்செய்கைக்கு உட்படுத்தப்பட்டது. கூடுதலாக, 1975ஆம் ஆண்டில், கூட்டுறவு சங்கங்களுக்கான வீட்டுவசதித் திட்டம் தொடங்கப்பட்டது.
பெரும்பாலான மாவட்டங்களில் இதேபோன்ற பண்ணைத் திட்டங்கள் நிறுவப்பட்டன. பத்தேகம பண்ணை திட்டம் அரசியல் சிக்கல்களை எதிர்கொள்ளும் வரை பெரும் வெற்றியைப் பெற்றது. பிரதேச அபிவிருத்தி சபைகள் என்பது ஒரு சோசலிச கருத்தாகும்.
இது அமைச்சரவையில் இருந்த இடதுசாரிக் குழுவால் வடிவமைக்கப்பட்டது. நிதியமைச்சர் டாக்டர் என்.எம்.பெரேராவும் இதில் அடங்குவர். இந்த அமைச்சர்கள் 1975இல் அரசாங்கத்தை விட்டு வெளியேறினர், அதன் பிறகு இந்த திட்டத்தில் குறைந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
மாத்தறை மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் கார்வின் கருணாரட்ன இந்தத் திட்டம் தொடர்பான தனது அனுபவங்களை இவ்வாறு பகிர்கிறார். ‘மாத்தறை மாவட்டத்தின் மொரவாக்க பிரதேச அபிவிருத்திச் சபை நீர்வண்ணப் பூச்சு (Watercolour Paint) தயாரிக்கும் திட்டத்தை நிறுவுவதற்கான ஒரு திட்டத்தை சமர்ப்பித்தது.
எங்கள் வேண்டுகோளின் பேரில் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சால் ஒரு சாத்தியக்கூறு ஆய்வு செய்யப்பட்டது. இறக்குமதிகளைத் தவிர்ப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
இந்தத் தொழிலுக்கு இந்தத் துறையில் தொழிலாளர்களைத் தவிர, வேறு எந்த வளமும் தேவையில்லை, ஜப்பான் சிங்கப்பூர் ஆகியன தங்கள் தொழில்துறை வளர்ச்சியில் பயன்படுத்திய உத்தி அதுதான். திட்ட நடைமுறைப்படுத்தல் அமைச்சு இந்த விண்ணப்பத்தை நிராகரித்தது.
இறக்குமதி மாற்று வகை திட்டங்களுக்குப் பதிலாக, செங்கல் தயாரித்தல், ஓடு தயாரித்தல், கைவினைப்பொருட்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஏற்கெனவே தனியார்த் துறையில் ஏராளமான ஓடு மற்றும் செங்கல் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இருந்தன. இறக்குமதிக்கு மாற்றான தொழில்களை நிறுவுவதில் அமைச்சு ஆர்வம் காட்டவில்லை.
இறக்குமதிக்கு மாற்றான தொழில்துறைசார் திட்டங்கள் பலவற்றை நாம் சமர்ப்பித்திருந்தாலும், அவை அனைத்தும் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டன.”
இவ்வாறு இருந்தபோதும் சில திட்டங்கள் பாரிய சவால்களுடனும் அரசாங்க அலுவலர்களுடனான மோதலின் வழியும் உருவாகின. அப்படியான ஒன்றுதான் தெனியாய பிரதேச அபிவிருத்திச் சபையால் முன்னெடுக்கப்பட்ட கிரயோன் உற்பத்தியாகும்.
முதலில் இதற்கான அனுமதி கிடைக்காதபோதும் இப்பொருளின் தரம், இதன் உற்பத்திச் சிக்கனம், வினைத்திறன் ஆகியவற்றின் காரணமாக இது அரசாங்கத்தின் வரவேற்பைப் பெற்றது.
ஆனால் புதிய அரசாங்கத்தின் தடையற்ற வர்த்தகக் கொள்கைகளின் கீழ் இறக்குமதிகளின் தாக்குதல் காரணமாக, கிரயோன் தொழில் விரைவிலேயே மூடப்பட்டது.
1972 முதல் 1977 வரை அதன் உச்சத்தில் இருந்தபோது, இந்த கிரயோன் தொழிற்சாலை நாட்டின் தேவைகளில் ஐந்தில் ஒரு பங்கை உற்பத்தி செய்தது. இந்த மாதிரியைப் பின்பற்றி நாட்டின் முழுத் தேவைகளையும் உற்பத்தி செய்யும் வகையில் மட்டுமல்லாமல், ஏற்றுமதி வர்த்தகத்தை உருவாக்கவும் முனைந்திருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை.
இது குறித்து கார்வின் கருணாரட்ன இவ்வாறு எழுதுகிறார்: ‘எந்தவொரு நாட்டிலும் ஒரு வெற்றிகரமான தொழில் நிறுவப்பட்டால், அது தேசிய நலனுக்காக நெருக்கமாக ஆதரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் இலங்கையில் அப்படி இல்லை. அரசியல் போட்டி அதன் அசிங்கமான தலையை உயர்த்தும் போது எல்லாம் நாசமாகிப் போய்விடுகிறது”.
டாக்டர் என்.எம்.பெரேரா தலைமையிலான இடதுசாரி, அமைச்சர்கள் 1975இல் அரசாங்கத்தை விட்டு வெளியேறியதால், பிரதேச அபிவிருத்திச் சபைகள் முக்கியத்துவம் இழந்தன. புதிய அரசாங்கம் பின்பற்றிய சுதந்திர சந்தை மற்றும் தாராளமயமாக்கல் கொள்கையுடன் இத்திட்டத்திற்கான சாவு மணி ஒலித்தது.
1978 ஆம் ஆண்டு பட்ஜெட் உரையில், 2619 திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்ட போதிலும், 666 திட்டங்கள் ஒருபோதும் தொடங்கப்படவில்லை என்றும், மீதமுள்ள 700 திட்டங்கள் 1976 ஆம் ஆண்டுக்குள் மூடப்பட்டதாகவும், மீதமுள்ள 700 திட்டங்களில் 5% மட்டுமே சாத்தியமானதாகக் கண்டறியப்பட்டதாகவும், 72% விவசாயத் திட்டங்கள் தோல்வியடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இது முந்தைய அரசாங்கத்தின் முதன்மையான குறித்த திட்டங்கள் மீது புதிய அரசாங்கம் கொண்டிருந்த அவதூறின் ஒரு பகுதியாகும்.
இந்தத் திட்டத்தில் பலவீனங்கள் ஏராளம் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். முன்னர் சுட்டிக்காட்டியபடி, திட்ட நடைமுறைப்படுத்தல் அமைச்சு பாரம்பரிய, கைவினை வகை தொழில்கள் மற்றும் விவசாய பண்ணைகளுக்கு மட்டுமே ஒப்புதல் அளித்து வந்தது.
மேலும் புதிய இறக்குமதி மாற்று வகை தொழில்களை அங்கீகரிக்க வெட்கப்பட்டது. எந்தவொரு தோல்வியும் மோசமாகப் பிரதிபலிக்கும் என்பதால், புதிய செயல்பாட்டுத் துறைகளுக்குள் நுழைய அமைச்சு பயந்திருக்கலாம். இறக்குமதிகள் நமது கிடைக்கக்கூடிய அந்நியச் செலாவணியை விழுங்கி, நமது மக்களை வேலையில்லாமல் இருக்கச் செய்கின்றன.
கைவினைப்பொருட்கள் மற்றும் அடிப்படை பாரம்பரிய தொழில்களில் கவனம் செலுத்துவது, முன்னர் செயலில் இருந்த சிறு தொழில்கள் துறை செய்த பணிகளை நகலெடுப்பதற்குச் சமம். இறக்குமதி மாற்று வகை தொழில்களைத் திட்டமிட்டு நிறுவுவதில் அமைச்சு உண்மையில் முன்னணியில் இருந்திருக்க வேண்டும்.
மற்றொரு பலவீனம் என்னவென்றால், இந்தத் திட்டம் தொழிலாளர் கூட்டுறவுகளை மட்டுமே சார்ந்திருந்தது.
தனியார்த் துறையை முற்றிலும் தனிமையில் விட்டுவிட்டது. தனியார்த் துறை கூடுதலாக செயல்படுத்தப்பட்டிருந்தால், அது இரண்டு கால்களில் நடப்பதாக இருந்திருக்கும். இந்தத் திட்டத்தின் முக்கிய பலவீனம் கட்சி அரசியல் நிர்வாக அமைப்பின் பாராளுமன்ற வடிவத்தில் உள்ளது.
அங்கு ஒரு புதிய அரசியல் கட்சி ஆட்சிக்கு வரும்போது அது வெற்றிகளைப் பொருட்படுத்தாமல் முந்தைய அரசாங்கத்தின் அனைத்து திட்டங்களையும் கொள்கைகளையும் தூக்கி எறிந்துவிடும். அதுதான் இங்கும் நடந்தது.
இத்திட்டத்தில் வணிக ரீதியாக சாத்தியமான முயற்சிகள் பல இருந்தன.
இவை தேசிய பொருளாதாரத்திற்கு உதவின. அவற்றின் உற்பத்தி இறக்குமதியில் ஏற்படும் அந்நியச் செலாவணியைச் சேமிக்க உதவியது. கூட்டுறவு தொழில்முனைவோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது முக்கியத்துவம் வாய்ந்தது.
பங்கேற்பாளர்களின் திறன்களையும் திறன்களையும் வளர்த்து, அவர்களை சுயசார்பு தொழில்முனைவோராகவும், தங்கள் சொந்தக் காலில் நிற்கக்கூடியவர்களாகவும் மாற்றும் கல்விச் செயல்முறை கூடுதல் பலமாக இருந்தது.
இதற்குப் பயன்படுத்தப்பட்ட சமூக மேம்பாடு, முறைசாரா கல்வியின் உத்திகள் என்பன காரணமாகும்.இந்த முயற்சியின் கீழ் திட்டமிடுவதிலும் செயல்படுத்துவதிலும், பங்கேற்பு அணுகுமுறையை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பது குறித்து திட்ட நடைமுறைப்படுத்தல் அமைச்சு அலுவலர்களுக்கு எந்த அறிவுறுத்தல்களையும் வழங்கவில்லை. இருப்பினும், அரசாங்க அதிபரின் கீழ் உள்ள அதிகாரிகளில்,
மக்களின் பங்களிப்புடன் கிராமப்புற மேம்பாட்டுப் பணிகளைக் கவனித்த கிராமப்புற அபிவிருத்தி துறையின் கீழ் நீண்ட காலம் பணியாற்றியவர்களும் அடங்குவர். இந்த கிராமப்புற அபிவிருத்தித்துறை, இந்தியா போன்ற பல மூன்றாம் உலக நாடுகளில் ஐம்பதுகளில் செயல்படுத்தப்பட்ட சமூக மேம்பாட்டுத் திட்டத்திற்கு இணையாக இருந்தது.
மக்கள் தங்கள் சொந்த முயற்சியை முடிந்தவரை நம்பி தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் பங்கேற்பது, முன்முயற்சி சுய உதவியை ஊக்குவிப்பது, அவற்றை மிகவும் பயனுள்ளதாக மாற்றும் வழிகளில் தொழில்நுட்ப மற்றும் பிற சேவைகளை வழங்குவது என்ற வகையில் பிரதேச அபிவிருத்தி சபைகள் என்ற முயற்சி முக்கியமானதும் முன்னோடியானதுமாகும்.
நன்றி tamilmirror