குழந்தை பிறந்த பிறகு திருமண வாழ்க்கை கடினமாகி விடுகிறதா?

10 ஐப்பசி 2025 வெள்ளி 16:13 | பார்வைகள் : 144
ஒரு தம்பதியினரின் வாழ்க்கை, குழந்தை பிறந்த பிறகு அடியோடு மாற்றமடைகிறது. அன்றுமுதல் அவர்கள் புதிய வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்தத் தொடங்குகிறார்கள். நள்ளிரவில் குழந்தைக்கு உணவு ஊட்டுவது, அடிக்கடி மருத்துவரை ஆலோசிப்பது மற்றும் டயப்பர் மாற்றுவது என அவர்களின் பெரும்பாலான நேரமும் இதற்கே செலவாகும்.
மேலும் குழந்தை பிறந்த அடுத்த நொடியே அம்மா, அப்பாவின் பங்கு முன்னுரிமை பெற, கணவன், மனைவியின் பங்கு பின்தங்கத் தொடங்குகிறது. ஒரு காலத்தில் எந்தக் கவலையும் இன்றி காதல் ஜோடியாக வலம் வந்தவர்கள், இப்போது இருவரும் சேர்ந்து தனிமையில் இருக்கக் கூட நேரம் இருப்பதில்லை. பெரும்பாலான இந்திய குடும்பங்களில், இந்த மாற்றம் கலாச்சார எதிர்பார்ப்புகளால் இன்னும் அதிகமாக்கப்படுகிறது. "தாய்மை தான் ஒரு பெண்ணின் மிகப்பெரிய கடமை" போன்ற சொற்றொடர்கள் மறைமுக அழுத்தங்களை உருவாக்குகின்றன. "இனி உங்களுக்கென்று எந்த தனித்துவமும் இல்லை. இனி நீங்கள் ஒரு குழந்தைக்கு பெற்றோர்" என அறிவுறுத்தப்படுகிறது. பெண்களைப் பொறுத்தவரை, அவர்கள் சில விஷயங்களை தியாகம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஆண்கள் தங்களை அறியாமலேயே பாதுகாவலர் என்ற பாத்திரத்தில் தஞ்சம் அடைகிறார்கள். இதன் விளைவாக தம்பதியருக்கு இடையே உணர்ச்சி ரீதியான இடைவெளி அதிகமாகிறது.
உளவியல் ரீதியாகவும் பெற்றோர் இருவரும் மிகப்பெரிய மாற்றங்களுக்கு உள்ளாகிறார்கள். பால் ஊட்டுவது, தூக்கமில்லா இரவுகள், பள்ளிக்கு அனுப்புவது போன்ற உணர்ச்சி ரீதியான சுமைகளை தாய் சுமக்கிறாள். இதைத் தவிர்த்து தான் யார் என்ற அடையாளச் சிக்கலுக்குள் தாய்மார்கள் மாட்டிக்கொள்கிறார்கள். மறுபுறம், பாரம்பரிய குடும்ப அமைப்புகளுக்குள் இருக்கும் தந்தையோ, மனைவிக்கு உதவ விரும்பினாலும் ஒதுக்கப்பட்டதாகவோ அல்லது அர்த்தமுள்ள பங்களிப்பை எவ்வாறு செய்வது என்று தெரியாமலோ பரிதவிப்பை உணர்கிறார்கள். காலப்போக்கில் கணவன் மனைவிக்கு இடையே மனக்கசப்பு அதிகரிக்கிறது. தாய் ஆதரவற்றவராக உணர்கிறாள்; தந்தையோ பாராட்டப்படாதவராக உணர்கிறார். இருவருக்கும் இடையே நெருக்கம் குறையத் தொடங்குகிறது.
குழந்தைகளின் வீட்டுப்பாடம் அல்லது பள்ளிக் கட்டணம் மட்டுமல்ல; உங்கள் உணர்வுகளைப் பற்றியும் இருவரும் மனம்விட்டு பேசுங்கள். பெற்றோருக்குரிய கடமைகளை இருவரும் சமமாகப் பகிர்ந்து கொள்ளுங்கள். ஒரு தந்தை இரவில் குழந்தையை தூங்க வைப்பது மனைவிக்கு செய்யும் உதவியல்ல. ஒரு தந்தையாக அது அவரின் கடமை. தினமும் 15 நிமிடங்களாவது இருவரும் தனிமையில் உரையாடுங்கள். ஒன்றாக டீ பருகுவது, நடைப்பயிற்சி செல்வது என எதுவாக இருந்தாலும், உங்களுக்கு இடையே நெருக்கத்தை வளர்க்கும். பெற்றோரான பிறகு, கணவன்-மனைவிக்கு இடையே இருந்த காதல் முடிந்து போன ஒன்று என நினைக்கக் கூடாது. இந்த மாற்றங்களை உணர்வுபூர்வமாக கடந்து செல்லும் தம்பதிகள் பெரும்பாலும் வலிமையானவர்களாகவும், மீள்தன்மை கொண்டவர்களாகவும், ஆழமான பிணைப்பு கொண்டவர்களாகவும் மாறுவார்கள்.