Paristamil Navigation Paristamil advert login

வாட்ஸ்அப்பை முந்திய தமிழ்நாட்டு நிறுவனத்தின் அரட்டை செயலி

வாட்ஸ்அப்பை முந்திய தமிழ்நாட்டு நிறுவனத்தின் அரட்டை செயலி

2 ஐப்பசி 2025 வியாழன் 11:36 | பார்வைகள் : 237


அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்தியாவிற்கு 50% வரி, மற்றும் H1B விசா கட்டணத்தை உயர்த்துவது என இந்தியாவிற்கு எதிரான நகர்வுகளை சமீபத்தில் மேற்கொண்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அமெரிக்கா தயாரிப்புகளை புறக்கணித்து, இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்ற குரல் எழுந்தது.

இதனிடையே, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், "இந்தியாவில் தயாரிக்கப்படும் ZOHO நிறுவனத்தின் அரட்டை செயலி, கட்டணமில்லாமல் எளிமையாக, பாதுகாப்பாக உள்ளது. இதனை இந்தியர்கள் பயன்படுத்த முன்வர வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.

இதனை தொடர்ந்து, இந்தியர்கள் பெருமளவில் இந்த செயலியை பயன்படுத்த துவங்கியுள்ளனர். கடந்த 3 நாட்களில் மட்டுமே3.5 பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

திடீரென அதிகளவிலான பயனர்கள் பயன்படுத்த தொடங்கியதால், அரட்டை செயலியின் சர்வர் முடங்கியது. "ஓரிரு நாட்களில் நிலைமை சரி ஆகிவிடும், எங்கள் உள்கட்டமைப்புகளை விரிவுபடுத்த உள்ளோம்" என அரட்டை செயலி தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்தது.

இதன் காரணமாக கூகிள் ப்ளே ஸ்டோரின் சமூகஊடக பிரிவில், வாட்ஸ்அப், பேஸ்புக், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளை முந்தி அரட்டை முதலிடம் பிடித்துள்ளது.

சென்னையை தலைமையிடமாக கொண்டு ஸ்ரீதர் வேம்புவின் ZOHO நிறுவனம் இயங்குகிறது. ZOHO நிறுவனம் கடந்த 2021 ஆம் ஆண்டில் அரட்டை செயலியை வெளியிட்டது.

இதன் லோகோ தமிழ் எழுத்தான 'அ' என்ற வடிவில் உள்ளது.

இந்த அரட்டை செயலியில் வாட்ஸ்அப் போல், குறுஞ்செய்தி, குரல் வீடியோ, படங்கள் போன்றவற்றை பரிமாறிக்கொள்ளலாம். மேலும், குரல் மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஸ்டோரி, குழுக்கள், சேனல் போன்ற வசதிகளும் இதில் உண்டு.

ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஆகிய 2 தளங்களிலும் இந்த செயலி கிடைக்கிறது. மேலும், கணினி, டேப்லெட் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களிலும் பயன்படுத்த முடியும்.

ஆனால், இந்த செயலியில் குரல் மற்றும் வீடியோ அழைப்புகள் மட்டுமே எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் உள்ளது. அனுப்பும் செய்திகளுக்கு எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் பாதுகாப்பு இல்லை.

தற்போது அரட்டைகளுக்கும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் உருவாக்கப்பட்டு வருகிறது. விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்