Paristamil Navigation Paristamil advert login

ஷ்ரேயாஸ் ஐயர் ஏன் இல்லை...? அஷ்வின் எழுப்பிய கேள்வி

ஷ்ரேயாஸ் ஐயர் ஏன் இல்லை...? அஷ்வின் எழுப்பிய கேள்வி

20 ஆவணி 2025 புதன் 10:57 | பார்வைகள் : 1664


ஆசியக் கிண்ணத் தொடருக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் ஏன் சேர்க்கப்படவில்லை என ரவிச்சந்திரன் அஷ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்.

துபாய் மற்றும் அபுதாபியில் செப்டம்பர் 9ஆம் திகதி ஆசியக் கிண்ணத் தொடர் தொடங்குகிறது.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் இதில் விளையாடுகின்றன. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இதில் ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashaswi Jaiswal) ஆகியோர் இடம்பெறாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விளக்கம் அளித்த தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், அணியில் 15 பேரைதான் சேர்க்க முடியும் என்றும், அவர்களுக்கான வாய்ப்புக்கள் காத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையில் ஷ்ரேயாஸ் ஐயர் ஏன் தெரிவு செய்யப்படவில்லை என்று ரவிச்சந்திரன் அஷ்வினும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் கூறுகையில், "ஷ்ரேயாஸ் அப்படி என்ன தவறு செய்தார்? கொல்கத்தாவை ஐபிஎல் கிண்ணம் வெல்ல வைத்தார். 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு பஞ்சாப் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார். சாம்பியன்ஸ் ட்ராஃபியை வென்று கொடுத்தார்.

ஷ்ரேயாஸ் மூன்றாவது இடத்தில் விளையாடலாம். சூர்யாவும், திலக்கும் 4, 5 இடங்களுக்கு மாறலாம். ஷ்ரேயாஸ் ஐயரை கொண்டுவந்தால் ஷிவம் தூபேவுக்கு இடமில்லை. எனினும் அவர் மாற்று வீரருக்கான நிலையில் இருக்க முடியும்" என தெரிவித்துள்ளார்.

மேலும் ஜெய்ஸ்வால் சேர்க்கப்படாததற்கும் அஷ்வின் தனது வருத்தத்தை பதிவு செய்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்